

மதுரையில் உள்ள தடுப்பூசி மையங்களில் அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பல கி.மீ., காத்திருந்து மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் குவிவதால் கரோனா தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
‘கரோனா’ தொற்று நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி மட்டுமே முக்கிய பாதுகாப்பாக உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கரோனா வந்தாலும் அதனுடைய தீவிரம் குறைவாக உள்ளது. உயிரிழிப்பு ஏற்படுவதும் குறைவாகவே இருக்கிறது.
இதனால், தற்போது மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான முகாம்களை நகர்ப்புறங்கள் முதல் கிராமங்கள் வரை ஏற்பாடு செய்து வருகிறது.
மதுரை நகர்ப்பகுதியில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில் பனங்கல் சாலையில் உள்ள மாநகராட்சி இளங்கோவன் பள்ளி மற்றும் அந்தந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
கடந்த சில வாரமாக அனைத்து தடுப்பூசி மையங்களிலும் கோவேக்சின் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டதால் அந்த தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இரண்டாவது தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
தற்போது கோவேக்சின் தடுப்பூசி வந்துவிட்டாலும் முதல் டோஸ் மட்டுமே நகர்ப்புற ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் சிறப்பு தடுப்பூசி மையங்களில் போடப்படுகிறது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை சார்பில், இளங்கோவன் பள்ளியில் கோவேக்சின் இரண்டாவது தடுப்பூசி போடப்படுகிறது. அதனால், அங்கு மக்கள் நகர்ப்பகுதி முழுவதும் இருந்து குவிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் டோக்கன் வழங்கப்பட்டு வரிசை முறையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதனால், டோக்கன் பெற்று தடுப்பூசி செலுத்துவதற்காக அதிகாலை முதலே மக்கள் திரண்டுவிடுகின்றனர்.
இன்று பல கி.மீ., தூரம் மக்கள் வரிசையில் நின்று தடுப்பூசி போட்டனர். போலீஸார் அவர்களை ஒழுங்குப்படுத்தி தடுப்பூசி போட வைத்தனர்.
ஒரே இடத்தில் அதிகளவு மக்கள் குவிந்து வருவதால் தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போடும் செவிலியர்கள், மருத்துவப்பணியாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். ஒய்வே இல்லாமல் தடுப்பூசி போட வருகிறவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவற்றைப் பதிவு செய்து தடுப்பபூசி போடுவதற்கு மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
அதனால், மதுரை நகர்ப்பகுதியில் ஒவ்வொரு வார்டு வாரியாக தடுப்பூசி மையங்களை விரிவுப்படுத்தி அதை விளம்பரப்படுத்தினால் இதுபோல் மக்கள் ஒரே இடத்தில் குவிவதைத் தடுக்க முடியும். ஒரே பகுதியில் சமூக இடைவெளி இல்லாமல் குவிவதால் கரோனா தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதனால், மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து இளங்கோவன் பள்ளி மட்டுமில்லாது மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கோவேக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் தட்டுப்பாடில்லாலம் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து மக்கள் ஒரே இடத்தில் அதிகளவில் தடுப்பூசி போடுவதைத் தடுக்க வேண்டும்.