

‘‘மாநகராட்சி குப்பை வண்டியில் காய்கறிகள் விநியோகம் செய்யப்படுகிறது’’ என்று முன்னாள் அமை்சர் செல்லூர் கே.ராஜூ குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ளதால் ஆக்சிஜன் படுக்கை மற்றும் போதிய தடுப்பூசி வழங்கிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் அமைச்சர்களும் அதிமுக எம்எல்ஏ-க்களுமான செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி உதயகுமார், வி.வி.ராஜன்செல்லப்பா, பெரியபுள்ளான் என்ற செல்வம், ஐயப்பன் ஆகியோர் இன்று மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகரை சந்தித்து மனு வழங்கினர்.
அதன்பின் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கூறுகையில், ‘‘கரோனாவால் ஒருவர் கூட உயிர் பலியாகக் கூடாது என்பது அரசின் செயல்பாடாக உள்ளது. முன்களப்பணியாளர்கள் அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது கரோனா தொற்று குறைவாக இருந்தாலும் உயிர்பலி இரண்டு மடங்காக அதிகமாக உள்ளது. ஆகவே பரிசோதனை மையங்களையும், பரிசோதனை இடங்களையும் அதிகப்படுத்த வேண்டும். பரிசோதனை முடிவு 24 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். ஆனால் பரிசோதனை முடிவு 3 நாட்கள் பின் காலதாமாக கூறப்படுகிறது‘‘ என்றார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறியதாவது:
மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தடுப்பூசியைக் கேட்டுப் பெற்றிட வேண்டும். தற்போது விலைவாசி கடுமையாக உயர்ந்து வருகிறது.
மாநகராட்சி குப்பை வண்டிகளை சுத்தப்படுத்தி அதன்மூலம் காய்கறி விநியோகம் செய்கின்றனர். இதனால் குப்பைகள் வண்டி தட்டுப்பாடு ஏற்பட்டு குப்பைகள் எல்லாம் சிதறிக் கிடக்கிறது. மேலும், குப்பை வண்டியில் உணவுப் பொருட்களை கொண்டு வருவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
நோய்த்தொற்று உள்ள உறவினர்களுக்கு முன்பெல்லாம் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. தற்போது அதேபோல் வழங்கிட வேண்டும். சத்து மாத்திரைகளை அனைத்து இடங்களில் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.