Last Updated : 31 May, 2021 07:10 PM

 

Published : 31 May 2021 07:10 PM
Last Updated : 31 May 2021 07:10 PM

மக்களை நோக்கிச் செல்லும் காவல்துறை; தென்காசி மாவட்டத்தில் நடமாடும் காவல் தீர்வு மையம்: எஸ்.பி தொடங்கிவைத்தார்

மக்களை தேடிச் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தென்காசி மாவட்டத்தில் புதிய முயற்சியாக நடமாடும் காவல் தீர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை எஸ்.பி சுகுணாசிங் தொடங்கிவைத்தார். அப்போது, செய்தியாளர்களிடம் எஸ்.பி சுகுணாசிங் கூறியதாவது:

தென்காசி மாவட்டத்தில் மக்களை நோக்கிச் சென்று, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடமாடும் காவல் தீர்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் 4 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இந்த 4 உட்கோட்டங்களுக்கும் தலா 2 ஒரு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 ஆண் காவலர்கள், 3 பெண் காவலர்கள் கொண்ட குழு பணியில் இருப்பார்கள்.

ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு நாள் வாகனத்தில் சென்று, அங்கு உள்ள பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கரோனா ஊரடங்கு காலத்தில் காவல் நிலையத்துக்கு செல்ல முடியாத சூழல் இருந்தால் தங்களை நாடி வரும் நடமாடும் காவல் தீர்வு மைய குழுவில் தெரிவிக்கலாம்.

வழக்கு தொடர வேண்டிய நிலை இருந்தால் காவல்துறை ஆய்வாளர் அந்த கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும்.

ஊரடங்கு விதிமுறையை மதித்து பொதுமக்கள் பலர் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள், பால், மருந்துகள் கிடைக்கச் செய்வது காவல்துறையின் தலையாய கடமை.

அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்தால் காவல்துறை வாகனங்கள் மூலம் உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்பத்தலைவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தால் அவர்களது குடும்பத்துக்கு நடமாடும் காவல் தீர்வு மையம் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும். அவர்களது வீடுகளுக்கு பெண் காவலர்கள் சென்று, அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவசமாக கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை நோக்கி காவல்துறை வருவதால் தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம். உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் அரசுத்துறை மற்றும் காவல்துறை மூலம் நிவர்த்தி செய்யப்படும்.

தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஒரு வாரம் கழித்து திருப்பி வழங்கப்படுகிறது. மீண்டும் தேவையின்றி சுற்றித் திரிந்தால் நீதிமன்றம் மூலமே வாகனங்களை திரும்பப் பெற முடியும்.
இவ்வாறு எஸ்பி கூறினார்.

பின்னர், நடமாடும் காவல் தீர்வு மையத்தில் உள்ள காவல்துறையினரிடம் எஸ்பி பேசும்போது, “இத்தனை நாளும் பொதுமக்கள் தங்கள் பிரச்சினைக்காக காவல் நிலையத்தை தேடி வந்தனர். இனி, பொதுமக்களுக்காக நாம் அவர்களை தேடிச் செல்ல வேண்டும். அந்த ஊரில் ஓர் இடத்தில் வாகனத்தை நிறுத்தி, ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களிடம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறு சிறு பிரச்சினைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காண வேண்டும். வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தால் காவல் ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும். காவல் ஆய்வாளர் உடனடியாக அங்கு வந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார்.

ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள், மருந்து, பால், மளிகைப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எந்த மக்களும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காத நிலை இருக்கக் கூடாது. அத்தியாவசிய பொருட்கள் சரியாக கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்வதோடு, வாகனங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராமங்களில் குடும்பத்தலைவர் கரோனா தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தால் அந்த குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்க தொண்டு நிறுவனங்கள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் பசியால் வாடும் நிலை இருக்கக் கூடாது. பொதுமக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். இதை ஒரு வேலையாக பார்க்கக் கூடாது. ஆண் காவலர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். பெண் காவலர்கள் நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நாளும் எத்தனை புகார்கள் பெறப்பட்டன, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பவை குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு விருது வழங்கி பாராட்டப்படும். இந்த சேவையை சிறப்பாக செய்து, காவல்துறைக்கு நற்பெயர் பெற்றுத் தர வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x