முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்; ஆண்டு வருமான வரம்பை அதிகரிப்பது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும்: உயர் நீதிமன்றம்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்
Updated on
1 min read

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய் என்ற வரம்பை அதிகரிப்பது குறித்து, அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு, தன் கட்டுப்பாட்டில் எடுத்து இலவச சிகிச்சை வழங்கக் கோரி, நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று (மே 31) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக, தனியார் மருத்துவமனைகளுக்குக் கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சேர்வதற்கு தற்போது ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது எனவும், அதன்படி யாரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய முடியாது எனவும் தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள், குறைந்தபட்ச ஊதியத்தை விடக் குறைவாக உள்ள இத்தொகையைக் குறைந்தது ஒரு லட்சமாக உயர்த்த வேண்டும் எனவும், அரசின் கொள்கை முடிவு என்பதால், இதுகுறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் கூறி, வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்குத் தள்ளிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in