

தமிழகத்தில் தற்போதுள்ள நிலையைக் கருத்தில் கொண்டு, தடுப்பூசிகள், ரெம்டெசிவிர் மருந்துகள், ஆக்சிஜன், கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகளைக் கூடுதலாக அனுப்பும்படி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
''தமிழகத்துக்கான தடுப்பூசியில் கையிருப்பு குறைவாக உள்ளது. தடுப்பூசிகளைப் பொறுத்தவரை இதுவரை மத்திய அரசு சார்பில் வந்திருப்பது 83 லட்சம். தடுப்பூசிகளைப் பெறுவதற்காக தமிழக முதல்வர் கட்டியிருக்கும் தொகை ரூ.85 கோடியே 48 லட்சம். இதன் மூலம் நாம் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்ய வேண்டிய அளவு 25 லட்சம். இதில் 18 - 45 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதுவரை 13 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதில் இன்னமும் 12 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வர வேண்டும்.
மத்திய அரசு தமிழகத்துக்கு அளித்துள்ள 83 லட்சம் தடுப்பூசியும், தமிழகம் கொள்முதல் செய்துள்ள 13 லட்சமும் சேர்த்து 96 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை போடப்பட்டுள்ள தடுப்பூசிகளின் அளவு 87 லட்சம். தற்போது கையிருப்பில் 5 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே உள்ளன'' என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தெரிவித்தார்.
தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தடுப்பூசி இல்லாத நிலை உருவாகி, பொது மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உருவாகலாம் என சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் நேற்று பேட்டி அளித்தார்.
''8 கோடிக்கு மேல் மக்கள்தொகை உள்ள தமிழகத்துக்கு 6% தடுப்பூசியும், 7 கோடி மக்கள்தொகை உள்ள குஜராத்துக்கு 16% தடுப்பூசியும் மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதிலும் பாரப்பட்சம் காட்டுகிறது. குற்றம் சொல்லும் பாஜக தலைவர்கள் முருகனும், வானதி சீனிவாசனும் முடிந்தால் மத்திய அரசிடம் பேசி அதிக தடுப்பூசியை வாங்கித் தாருங்கள்'' என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரதமருக்கு வேண்டுகோள் கடிதத்தை எழுதியுள்ளார்.
“தமிழகத்திற்குத் தேவைப்படும் தடுப்பூசிகள், ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகளை அதிகரித்து வழங்க உடனடியாக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கருப்புப் பூஞ்சை நோய் (mucormycosis) வேகமாகப் பரவி வருவதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
இதற்கான ஆம்போடெரிசின்-பி மருந்து (Liposomal amphotericin B14) மருந்து தட்டுப்பாடும் தமிழகத்தில் அதிகம் உள்ளது. தயவுசெய்து கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து ஆம்போடெரிசின்-பி மருந்து சப்ளையை அதிகரித்து பாதிக்கப்பட்டவர்கள் உயிரைக் காக்க உதவ வேண்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.