Published : 31 May 2021 07:21 PM
Last Updated : 31 May 2021 07:21 PM

கரோனா பாதித்தவர்கள், பலியானவர்களின் புள்ளிவிவரங்களைத் தெரிவிப்பது அவமானமல்ல: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை உயர் நீதிமன்றம்: கோப்புப்படம்

சென்னை

கரோனா பாதித்தவர்கள், பலியானவர்களின் புள்ளிவிவரங்களைத் தெரிவிப்பது அவமானமல்ல என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில், தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையில், தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதாகவும், மத்திய அரசு 650 டன் ஆக்சிஜன் ஒதுக்கியுள்ளதாகவும், அதை வீணாக்காமல் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியைப் பொறுத்தவரை, 44 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக 83.08 லட்சம் டோஸ்களும், 18 வயது முதல் 44 வயதுடையவர்களுக்காக 13.10 லட்சம் டோஸ்களும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 30-ம் தேதி நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்ட 75.73 லட்சம் பேருக்கும், 18 முதல் 44 வயது வரையிலான பிரிவினருக்கு 11.97 லட்சம் பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இருப்பு இன்னும் இரு நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்பதால், போதுமான தடுப்பூசி மருந்துகளை சப்ளை செய்யக் கோரி, மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும், இதுதவிர, 3.5 கோடி டோஸ்கள் கொள்முதலுக்காக சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் முகத்தை உறவினர்களுக்குக் காட்டுவதைப் பொறுத்தவரை, ஏற்கெனவே வழிகாட்டு விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி தனிமைப்படுத்தல் அறையில் இருந்து எடுக்கும்போதும், அடக்கம் அல்லது தகனம் செய்யும் முன்பும் முகங்களைக் காட்ட அனுமதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவியுடன், அவர்களின் படிப்பை அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும், பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும், உறவினர்களால் கவனிக்கப்படும் குழந்தைகளுக்கு மாதம் 3,000 ரூபாய் உதவித்தொகையும் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வில் இன்று (மே 31) விசாரணைக்கு வந்தபோது, தமிழகத்தில் உள்ள முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கும் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கரோனா தொடர்பான புள்ளிவிவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும், கரோனா நிவாரண உதவிகள் வழங்கச் செல்லும் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் ஏராளமான தொண்டர்கள், தடுப்பு விதிகளைப் பின்பற்றாமல் செல்வதாகவும் வழக்கறிஞர்கள் குறை கூறினர்.

இதைக் கேட்ட நீதிபதிகள், கரோனா இரண்டாவது அலை தணிந்து வருவதாகவும், மத்திய - மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் திருப்தியளிப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 216 கோடி தடுப்பூசி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என்ற இலக்கை விரைந்து எட்ட வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், கரோனா தொற்று எண்ணிக்கை, பலி எண்ணிக்கை விவரங்களைத் தெரிவிப்பது அவமானமல்ல எனவும், அந்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியதாகக் குற்றச்சாட்டும் இல்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், வழக்கு விசாரணையை ஜூன் 7-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x