

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மணப்பாறை அரசு மருத்துவமனையில் தற்போது 250 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன். மருத்துவமனைக்கு எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் செய்து தருவதாகக் கூறியுள்ளேன்'' என்று தெரிவித்தார்..
தொடர்ந்து, அரசு மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அரசியலைக் கடந்து தீவிரமாகச் செயல்பட்டால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க் கட்சியினர் குற்றம் சுமத்திக் கொண்டேதான் இருப்பார்கள். அதைக் கடந்துதான் எங்களது சேவை இருக்கும். தீவிர கரோனா தொற்றாளர்கள் சிகிச்சைப் பிரிவில் நுழைந்து தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் முதன்முதலில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.
அதேபோல், எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு நாங்கள் உழைக்கிறோம். எங்களுக்கு வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று உணரும் அளவுக்கு எங்களுடைய உழைப்பு இருக்கும் என்று முதல்வர் கூறியுள்ளார். எனவே, அரசியல் செய்வதற்கான காலம் இதுவல்ல என்பதை எதிர்க்கட்சிகள் உணர வேண்டும்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஆய்வின்போது சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதி உறுப்பினர் ப.அப்துல் சமது, மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர் முத்து கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.