

பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், ஜாமீன் கோரிய ஆசிரியர் ராஜகோபாலன் மனு மீதான விசாரணை, ஜூன் 3ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ராஜகோபாலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணை நாளைக்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
சென்னை கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில், 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு வணிகவியல் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். இவர் அங்கு பயின்ற மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். 2016-ம் ஆண்டில் 12-ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜகோபாலன் கடந்த 24ஆம் தேதி கைதானார்.
இந்த நிலையில், ராஜகோபாலன் ஜாமீன் கோரி சென்னை போக்சோ நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதேபோல், காவல்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி முகமது பரூக் முன்பு இன்று (மே 31) விசாரணைக்கு வந்தது. ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வரும் 3ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
அதேபோல், ராஜகோபாலனைக் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய காவல்துறையின் மனு நாளைக்கு (ஜூன் 1) தள்ளிவைக்கப்பட்டது.