

திருச்சி - ராமேஸ்வரம் ரயில் பாதை மின்மயமாக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. மேலும் மின் விநியோகத்திற்காக காரைக்குடியில் துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் வழித்தடங்களையும் 2027-க்கும் மின்மயமாக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அதன்படி திருச்சியில் இருந்து புதுக்கோட்டை, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் வரை 264 மின்மயமாக்கப்பட்டு வருகிறது.
இப்பணி திருச்சியில் இருந்து மானாமதுரை வரை, மானாமதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை என இரண்டு பகுதிகளாக நடந்து வருகின்றன. இதில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை 151 கி.மீ. தொலைவிற்கு இதுவரை காரைக்குடியை அடுத்து கல்லல் வரை மின் கம்பங்கள் ஊன்றும் பணி முடிவடைந்துள்ளது.
இன்னும் 36 கி.மீ. மட்டுமே உள்ளன. தற்போது கரோனாவால் குறைவான ரயில்களே இயக்கப்படுவதால், மின்மயமாக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
மேலும் ரயில் மின்பாதைக்கு மின் விநியோகத்திற்காக காரைக்குடியில் 230 மெகா வாட் திறனுள்ள துணை மின்நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வருகிற 2022-க்குள் பணிகள் முடிவடைந்து ரயில்கள் இயக்க வாய்ப்புள்ளது,’ என்று கூறினார்.