Last Updated : 31 May, 2021 04:07 PM

 

Published : 31 May 2021 04:07 PM
Last Updated : 31 May 2021 04:07 PM

கரோனா ஊரடங்கால் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி: தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் வேதனை

கரோனா ஊரடங்கு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் மொத்தம் 46,107 ஏக்கர் நஞ்செய் நிலங்கள் பாசன வசதி பெற்றுள்ளன. இதில் தற்போதைய நிலவரப்படி 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். பெரும்பாலான பகுதிகளில் வாழைத்தார்கள் முதிர்ச்சியடைந்து தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கரோனா முழு ஊரடங்கு காரணமாக வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. விவசாயிகளின் விளைப் பொருட்களை கொண்டு செல்ல ஊரடங்கில் எந்த தடையும் இல்லை என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் கடைகள் அனைத்தும் முழுமையாக அடைக்கப்பட்டு, காய்கறி மற்றும் பழங்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் தெருத் தெருவாக விற்பனை செய்யப்படுகிறது.

வாழைப்பழங்களை பொறுத்தவரை பெட்டிக் கடைகள், சிறிய பழக்கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் தான் அதிகம் விற்பனையாகும். அதுபோல திருமண விழாக்கள், கோயில் கொடை விழாக்கள் போன்ற விழாக்களுக்காகவும் வாழைத்தார்கள் மொத்தமாக வாங்கப்படும். தற்போது கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாலும், விழாக்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் வாழைத்தார் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

மேலும் கேரளா உள்ளிட்ட வெளி மாநில வியாபாரிகளும் வராததால் வாழைத்தார் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. குறிப்பாக ஏத்தன் வாழைத்தார்களை கேரளா வியாபாரிகள் தான் வாங்கிச் செல்வார்கள். அவர்கள் வராததால் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.42-க்கு விற்பனையான ஏத்தன் வாழைத்தார்கள் தற்போது கிலோ ரூ.21-க்கு விற்பனையாகிறது.

இது குறித்து தூத்துக்குடி அருகேயுள்ள அத்திமரப்பட்டியை சேர்ந்த வாழை விவசாயியான ஜி.கே.மணி என்பவர் கூறியதாவது: அத்திமரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் சுமார் 10 லட்சம் ஏத்தன் வாழை பயிரிடப்பட்டுள்ளன. இங்கு மட்டுமல்ல சிவத்தையாபுரம், குரும்பூர், சோனகன்விளை உள்ளிட்ட தாமிரபரணி பாசனத்தில் அதிகளவில் ஏத்தன் வாழை பயிரிடப்பட்டுள்ளது.

ஏத்தன் வாழைத்தார்களை கேரளா வியாபாரிகள் இங்கே நேரடியாக வந்து கிலோ கணக்கில் எடை போட்டு வாங்கிச் செல்வார்கள். கடந்த 15 நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ஏத்தன் வாழைக்காய் ரூ.42 என வாங்கினார்கள். தற்போது ரூ.21-க்கு தான் வாங்குகிறார்கள். முதலில் இந்த பகுதிக்கு தினமும் 30 வண்டிகள் (மினி லாரிகள்) ஏத்தன் வாழைத்தார் வாங்கிச் செல்ல வரும். தற்போது 10 வண்டிகள் தான் வருகின்றன.

இதேபோல் அனைத்து வாழைத்தார்களின் விலையும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. கதலி வாழைத்தார்களை இங்குள்ள வியாபாரிகள் வாங்கி சென்னை கோயம்பேடு சந்தைக்கு அனுப்புவார்கள். சென்னையில் கதலி வாழைப்பழம் நன்றாக விற்பனையாகும். ஆனால் தற்போது கோயம்பேடு சந்தை மூடப்பட்டுள்ளதால் கதலி வாழைத்தார்களை வாங்க ஆட்கள் இல்லை. கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ கதலி வாழைக்காய் ரூ.12 முதல் ரூ.15 வரை விலை போனது. தற்போது வெறும் ரூ.3-க்கு தான் வாங்கிச் செல்கின்றனர்.

அதுபோல கிலோ ரூ.15-க்கு விற்பனையான சக்கை வாழைத்தார் தற்போது கிலோ ரூ.3-க்கு தான் விற்பனையாகிறது. அதுபோல ரூ.500-க்கு விற்பனையான கோழிக்கோடு தார் ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்பனையான நாட்டு வாழைத்தார் ரூ.100-க்கும் தான் தற்போது விற்பனையாகிறது.

விலை வீழ்ச்சியால் விவசாயிகளுக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டுள்ளது. சாகுபடி செலவு கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. விற்பனை குறைவு காரணமாக பல இடங்களில் வாழைத்தார்கள் தோட்டங்களிலேயே பழுத்து வீணாக போகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நஷ்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை ஏதாவது கிடைப்பது லாபமாக இருக்கட்டுமே என விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x