

பொது விநியோகத் திட்டத்திற்காக துவரம் பருப்பு மற்றும் பாமாயில் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டரை எதிர்த்து வழக்கு வாபஸ் பெறப்பட்டதால், டெண்டருக்கு மதுரை கிளை விதித்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது
பொது விநியோக திட்டத்தின் கீழ், பருப்பு மற்றும் எண்ணெய் கொள்முதலுக்கான ஏல அறிவிப்பை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி வெளியிட்டது. இந்த டெண்டருக்கு தடை விதிக்க கோரி கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், “2021 ஏப்ரல் 26-ம் தேதி 20,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதலுக்கான ஏல அறிவிப்பையும், 2021 மே 5 -ம் தேதி 80 லட்சம் லிட்டர் பாமாயில் சமையல் எண்ணெய்க்கான டெண்டர் அறிவிப்பும் தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது.
முந்தைய நிபந்தனைகளை பின்பற்றாமல் தற்போது புதிய நிபந்தனைகள் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய நிபந்தனைகள் படி, டெண்டரில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள், கடைசி 3 ஆண்டுகளில் 71 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் (Turnover) கொண்டிருந்தால் மட்டுமே டெண்டரில் பங்கேற்க அனுமதி, ஆனால் தற்போது வெளியாகியுள்ள நிபந்தனையில் கடைசி 3 ஆண்டுகளில் 11 கோடி ரூபாய்க்கு விற்றுமுதல் (Turnover) செய்திருந்தால் போதும் எனக் குறைக்கப்பட்டுள்ளது”. எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை கடந்த வாரம் விசாரித்த மதுரைக் கிளை நீதிபதி வி.எம்.வேலுமணி, தமிழக அரசின் டெண்டருக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்க கோரி தமிழக அரசுத்தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதிகள், இதுசம்பந்தமாக மதுரைக் கிளையை தான் அணுக வேண்டும் எனத் தெரிவித்தனர். அதற்கு அரசுத்தரப்பில் கரோனா ஊரடங்கு காலம் என்பதால் பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு பருப்பு, எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டியுள்ளதாகவும், இடைக்காலத் தடை விதித்த நீதிபதி தலைமையில் தான் இரு நீதிபதிகள் அமர்வும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவாக தாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று பட்டியலிடப்பட்டிருந்தது.
ஆனால் மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரா் மணிகண்டன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் பருப்பு, பாமாயில் கொள்முதலுக்கு விதிக்கப்பட்ட தடை வழக்கை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் அரசின் மேல்முறையீடு மனுவை முடித்து வைத்தனர்.