

புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பேரிடர் சூழலில், மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டுசென்று தீர்வு காண முடியாத நிலை நிலவுகிறது என காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக அமைப்பாளருமான ஏ.எம்.எச்.நாஜிம் கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வணிகர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், தேவையான தளர்வுகள் உள்ளிட்டவை குறித்து காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் ஏ.முத்தையா தலைமையிலான நிர்வாகிகள் இன்று (மே 31) சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச்.நாஜிமை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசி மனு அளித்தனர்.
பின்னர் ஏ.எம்.எச்.நாஜிம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
”புதுச்சேரி மாநிலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் தளர்வுகள் வேண்டும் என்று சிலரும், தளர்வுகள் கூடாது முழு ஊரடங்கு வேண்டும் என்று சிலரும் கேட்கின்றனர்.
காரைக்கால் சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகிகள் என்னைச் சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இவை தொடர்பாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வர்தான் கலந்து பேசி முடிவெடுக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக அம்மாநில முதல்வர்கள்தான் இருந்து வருகின்றனர். புதுச்சேரியிலும் அவ்வாறு முன்னாள் முதல்வர் நாராயணசாமியிடம்தான் அப்பொறுப்பு இருந்தது. அப்போது பேரிடர் சூழலில் மக்கள் பிரச்சினைகள் குறித்து அவரிடம் எடுத்துக்கூறும்போது சில பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும், சிலவற்றுக்குத் தீர்வு கிடைக்காது.
ஆனால், புதிய ஆட்சி அமைந்து முதல்வர் பொறுப்பேற்று இவ்வளவு காலம் ஆகியும்கூட, பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் பொறுப்பை துணைநிலை ஆளுநர் விட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். அதனைக் கேட்டுப் பெறாமல் முதல்வரும் காலம் தாழ்த்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் அப்பொறுப்பை பெற்றுக் கொண்டால்தான் மக்கள் பிரச்சினைகள் குறித்துப் பேசி தீர்வு காணும் வாய்ப்பு மக்கள் பிரதிநிதிகளுக்குக் கிடைக்கும்.
முதல்வர் அந்தப் பொறுப்பை வாங்க வேண்டும். வியாபாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரை அழைத்துப் பேசி அடுத்த ஊரடங்கு நடவடிக்கை குறித்து கருத்துகளைக் கேட்க வேண்டும்”.
இவ்வாறு நாஜிம் கூறினார்.