Published : 29 Jun 2014 11:57 AM
Last Updated : 29 Jun 2014 11:57 AM

கருந்திரி ஆலையில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு - நிவாரணம் கோரி சாலை மறியல்

விருதுநகர் அருகே அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக இயங்கிய கருந்திரி ஆலைகளில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இறந்தவர்களின் சடலங்களை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், ஒண்டிப்புலிநாயக்கனூர் பி.டி.காலனியில் அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வந்த கருந்திரி ஆலைகளில் வெள்ளிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டது. இதில், கும்பகோணத்தைச் சேர்ந்த அருமைதுரை (40) சம்பவ இடத்திலேயே இறந்தார்.

கட்டிடங்கள் வெடித்து சிதறியதில் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சின்ராஜ் மகள் காளீஸ்வரி (9) மற்றும் அருகிலுள்ள வீட்டுவாசலில் அமர்ந்திருந்த பொன்னம்மாள் (70) ஆகியோரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பலத்த தீக்காயங்களுடன், விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராமகிருஷ்ணன் மகன் காளிமுத்து (13) வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். இதையடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

மேலும், ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த துரைராஜ் (42), சங்கரவேல் (45) ஆகியோர் நூறு சதவிகித தீக்காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், கட்டிடங்கள் வெடித்து சிதறியதில் காயமடைந்த கம்மாபட்டி காலனியைச் சேர்ந்த பா.முனீஸ்வரன் (10), க.மகேஸ்வரி (64), சீ.கருப்புசாமி (30), க.லட்சுமி (22), க.காளியம்மாள் (42), க.முருகேஸ்வரி (45), மா.சோலையப்பன் (38), சீ.சின்னராசு (32) ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்த அருமைதுரையின் உடலை அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை காலை பெற்றுச் சென்றனர். மற்ற 3 பேரின் உடல்களையும் வாங்க மறுத்து அவர்களது குடும்பத்தினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் எஸ்.பி. ஜஸ்டின் யேசுபாதம் தலைமையிலான போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீஸா ருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதையடுத்து, கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றினர்.

இதைக் கண்டித்து மற்றவர்கள் அரசு மருத்துவமனை முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

தகவலறிந்த ஆர்.டி.ஓ. உதயகுமார், வட்டாட்சியர் சிவஜோதி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடாக தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், ஆலை உரிமையாளர்களை போலீஸார் உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும், கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். ஆனாலும், பேச்சுவார்த்தையில் சமாதானம் அடையாத இறந்தவர்களின் குடும்பத்தினர், சடலங்களை வாங்க மறுத்து மருத்துவமனையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தீ விபத்து நடந்த கருந்திரி ஆலை உரிமையாளர்களான விருதுநகர் ஒன்றிய 13-வது வார்டு கவுன்சிலர் மீனாட்சிசுந்தரம், அய்யப்பன், ஆசீர்வாதம் ஆகியோர் மீது ஆமத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x