

தமிழகத்தில் செயல்படும் சிறுவர் இல்லம், முதியோர் இல்லங்கள் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வருவதால், உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அரசு தலையிட்டு உதவ வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் கோரியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா இன்று வெளியிட்டுள்ள அறிக்கை :
“பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், பெற்றோர்களை இழந்த சிறுவர்கள், சிறுமிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர்கள் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
உதாரணத்திற்கு மேற்கு மண்டலத்தில் மட்டும், கோவையில் 36, ஈரோட்டில் 23, நீலகிரியில் 30, திருப்பூரில் 23, சேலத்தில் 44, நாமக்கல்லில் 15, தருமபுரியில் 29, கிருஷ்ணகிரியில் 31 என மேற்கு மண்டலத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட ஆதரற்ற சிறுவர்கள் இல்லங்களில் ஏறத்தாழ 15 ஆயிரம் சிறுவர், சிறுமியர் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு பள்ளிகள் இன்னமும் திறக்கப்படாததால், ஒற்றைப் பெற்றோரைக் கொண்ட குழந்தைகள் பலர் தங்களது வீடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுவிட்டார்கள். தாத்தா, பாட்டி போன்ற உறவினர்கள் உள்ள குழந்தைகளையும் விடுதிப் பொறுப்பாளர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டனர். முழுமையாக ஆதரவற்ற மற்றும் வறுமையில் வாடும் குழந்தைகள் மட்டுமே தற்போது இல்லத்தில் தங்கியிருக்கின்றனர்.
இப்படித் தமிழகம் முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் இல்லங்களில் லட்சகணக்கான சிறுவர், சிறுமியர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இல்லங்கள் எல்லாம் சமுதாயத்தில் வசதி படைத்தவர்கள் தரும் நன்கொடைகள் மூலம் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா எனும் கொடிய அரக்கனால் அடித்தட்டு மக்கள் மட்டுமில்லாது, அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் வசதி படைத்தவர்கள் கரோனா ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், சிறுவர்கள் இல்லங்களுக்கு நன்கொடை அளிப்பது பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் சிறுவர்கள் இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்குக் கையிருப்பில் உள்ள அத்தியவாசியப் பொருட்களைக் கொண்டு தற்போது உணவு பரிமாறப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மேலும், தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளதால், இனி வரும் நாட்களில் சிறுவர் இல்லங்களில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகம் முழுவதும் உள்ள முதியோர் இல்லங்களில் ஏராளமானோர் தங்கியுள்ளனர்.
முதியோர் இல்லங்களில் வாழும் முதியவர்களுக்கு, வாழ்வு அமைதியாகவும், அதே சமயம் நிலைகுலைந்து போனதாகவும் இருக்கிறது. மிகுந்த மன அழுத்தத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் முதியோர் இல்லங்களும் நன்கொடையாளர்கள் மூலமே பெரும்பாலும் செயல்பட்டு வருகின்றன.
இந்த முதியோர் இல்லங்களுக்கும் வருமானம் இல்லாமல் கடும் நிதி நெருக்கடி கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் ஏற்பட்டுள்ளது. இப்படித் தமிழகத்தில் செயல்படும் சிறுவர் இல்லம், முதியோர் இல்லங்கள் நிதி நெருக்கடியால் சிக்கித் தவித்து வருவதால், இனி வரும் நாட்களில் சிறுவர்கள், முதியோருக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் சிறுவர் இல்லம், முதியோர் இல்லங்களில் தடையின்றி உணவு கிடைத்திட தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு முஸ்தபா வலியுறுத்தியுள்ளார்.