Published : 31 May 2021 03:12 AM
Last Updated : 31 May 2021 03:12 AM

தமிழகத்தில் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு: கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்துகள் மூலம் சிகிச்சை

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகமான ஆக்சிஜன், ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திகுறைவதால், கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பிறகு கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர். மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை தீவிரகரோனா தொற்றில் இருந்து குணமடைந்த 450-க்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை குணப்படுத்த பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) ஊசி மருந்துக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

தவறான தகவலை கூறவேண்டாம்

இந்நிலையில், இதுபற்றி அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கூறியதாவது:

கரோனா தொற்றைவிட கருப்பு பூஞ்சை நோய் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு சிகிச்சைஅளிக்க தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு உள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மருந்து இல்லை.ஆனால், மருந்து இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தவறான தகவலை கூறி வருகின்றனர். அப்படி இருந்தால் எவ்வளவு நோயாளிகளுக்கு ஆம்போடெரிசின்-பி மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்பதை வெளியிட வேண்டும்.

பொய் சொல்லி மக்களை ஏமாற்றவேண்டாம். இதே நிலை நீடித்தால், நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரிக்கும். தமிழக அரசு விரைந்துசெயல்பட்டு மத்திய அரசிடம் இருந்து தேவையான மருந்துகளைபெற வேண்டும். மாற்று வழிகளிலும் மருந்தை பெற்று நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இரண்டு நாட்களில் மருந்து

சுகாதாரத் துறை அதிகாரிகள், கருப்பு பூஞ்சையை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவினர் கூறியதாவது:

கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த தேவைப்படும் ஆம்போடெரிசின்-பி மருந்துக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் தட்டுப்பாடு உள்ளது. தமிழகத்தில் பாதிப்புக்கு ஏற்றவாறு மருந்தை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.

சிறப்பு படுக்கைகள்

2, 3 நாட்களில் மருந்து தமிழகம் வந்துவிடும். தற்போதைய நிலையில் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு, தனியார் மருத்துவமனைகளின் மூக்கு, கண், மூளை, தொற்றுநோய் நிபுணர்கள் 13 பேர் அடங்கிய மருத்துவக் குழுஅமைக்கப்பட்டுள்ளது. கரோனாதொற்றுக்கு அமைத்ததுபோல, கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சைஅளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

எளிதில் குணப்படுத்தலாம்

கருப்பு பூஞ்சை நோய் குறித்து அரசு மருத்துவர்கள் கூறியதாவது: மூக்கு, வாய், கண்களின் கீழ் பகுதியில் ஏற்படும் பூஞ்சையை கவனிக்காமல் விட்டால், அது அரித்துக்கொண்டு கண்களுக்கு சென்று பார்வை இழப்பை ஏற்படுத்தும். கண்ணை அகற்றும் நிலை ஏற்படும். கண்ணை அகற்றாவிட்டால் பூஞ்சை மூளைக்கு சென்று உயிரிழப்பை ஏற்படுத்தலாம். இதற்கு பல மருந்துகள் இருந்தாலும், ஆம்போடெரிசின்-பி விலை குறைவானது. இந்நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு கடும் தலைவலி, கண் வலி, வீக்கம், கண் சிவப்பு நிறமாக மாறுதல், பார்வை குறைதல், சைனஸ், மூக்கில் வலி, மூக்கில் நீர் வடிதல், வாய் உள்ளிட்ட சுற்றியுள்ள பகுதி கருப்பாக மாறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x