

கரோனா பரவல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கடந்தஓரண்டாகவே கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், சில தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஆன்லைன் வகுப்புகள் வழியே பாலியல் தொந்தரவு அளிப்பதாக மாணவிகள் பலர் வலைதளங்களில் புகார்களை பதிவு செய்துவருகின்றனர்.
இது தமிழகம் முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இணைய வகுப்புகளை ஒழுங்குப்படுத்தி கண்காணிக்க தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்துள்ளது. அதேநேரம், இந்த சிக்கலில் இருந்து மாணவர்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஒட்டுமொத்த சமூகத்துக்கும் உள்ளது என்ற கருத்தும் வலியுறுத்தப்படுகிறது.
இது தொடர்பாக உளவியல் நிபுணர் சங்கீதா பார்த்தசாரதி கூறியதாவது: இத்தகு பாலியல் சம்பவங்கள் வருத்தத்துக்குரியது என்றாலும், ஆச்சரியம் அளிக்கவில்லை. ஏனெனில், இந்த தவறுகள் நடைபெறுவதற்கான சூழல்களை நம் சமூக கட்டமைப்புகளே ஏற்படுத்தி தருகின்றன.
முன்பு இதுபோன்ற பாதிப்புகளை பொதுவெளியில் சொல்வதற்கான வாய்ப்புகள் குறைவாக இருந்தன. ஆனால், தற்போது பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கான தைரியத்தை சமூக வலைதளங்கள் வழங்குகின்றன.
நேரடி கற்பித்தல், ஆன்லைன் வழிக்கல்வி என எந்த முறையிலும் குழந்தைகள் மீதான சித்ரவதைகள் தொடர்கின்றன. ஆனால், தவறு நிகழ்ந்தால், பாதிக்கப்பட்ட குழந்தைகளை குற்றவாளிகளாகப் பார்க்கும் மனநிலைதான் தற்போதும் மேலோங்கியுள்ளது.
பெண்கள் பொருள் அல்ல...
நமது பண்பாடு, கலாச்சாரம், சாதி, மதம் உள்ளிட்ட அனைத்து சமூக கட்டமைப்புகளும், பெண்களை பொருளாகவே அணுகுகின்றன. உடைகள் அணிவது தொடங்கி, திருமணம் வரை அதன்ஆதிக்க எல்லைகள் நீள்கின்றன. இவை பெண்களின் மீது அதிகாரம்செலுத்துவதற்கான மனப்பான்மையை உருவாக்குவதால், தவறுகள் நடைபெற வழிவகை செய்துவிடுகின்றன.
பெரியவர்கள் பாலியல் தாக்குதலை தொடுக்கும்போது, அதை சமாளிப்பதற்கான உடல், மன நிலை குழந்தைகளிடம் இருக்காது. அப்போது அவர்களுக்கு மன ரீதியாக ஏற்படும் வேதனைகள், ஆறாதவடுக்களாக மாறி, எதிர்காலத்திலும் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த குற்றங்களை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது அவசியம். அதேநேரம், இதை ஒரு சமூக நோயாக அணுகினால் மட்டுமே, நிரந்தர தீர்வு கிடைக்கும். ஆனால், சாதி, மதம் சார்ந்த கருத்துகள் மூலம், பிரச்சினையை திசை திருப்பும் பணிகளே நடைபெற்று வருகின்றன.
பெற்றோர், பள்ளி நிர்வாகம் உட்பட அனைவரும், தங்களைப்பாதுகாத்துக் கொள்ள குழந்தைகளை பலியாக்கிவிடுகிறோம். இந்த விவகாரத்தை ஒட்டுமொத்த சமூகத்தின் தோல்வியாகப் பார்க்க வேண்டும். தற்போதைய குழந்தை வளர்ப்பு முறையில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. பெண் குழந்தைகளை அனைவருடனும் சகித்துக்கொண்டு வாழவே நாம் பழக்கப்படுத்தி வருகிறோம்.
தொட அனுமதிக்கக் கூடாது
அவர்களது சுய கருத்துகள், விருப்பங்கள் முடக்கப்படுகின்றன. இந்நிலையை மாற்றிக் கொள்வது அவசியமாகும். பாலியல் அத்துமீறல் என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, ஒருவரின் சுய விருப்பு,வெறுப்புகளை உள்ளடக்கியதாகும். குழந்தைகளின் விருப்பமின்றி அவர்களைத் தொடுதல் உள்ளிட்டசெயல்களை செய்ய விருந்தினர்கள், உறவினர்களை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.
குழந்தைகளை தைரியம்மிக்கவர்களாகவும், சுய கருத்துகளை முன்வைப்பவர்களாகவும் வளர்க்க வேண்டும். தினமும் ஒரு மணிநேரம் அவர்களிடம் மனம் விட்டுப் பேச வேண்டும்.
பெற்றோரிடம் பாதுகாப்பான உணர்வு கொள்ளும் குழந்தைகள் மட்டுமே, இத்தகைய விஷயங்களை வெளிப்படையாக பேசுவார்கள். அதற்கான சூழலை வீடுகளில் நாம் ஏற்படுத்தி தரவேண்டும். அதேபோல, ஏதேனும் ஒரு சம்பவம் நடைபெற்ற விவரங்களை குழந்தைகள் தெரிவிக்கும்போது, பெற்றோர் அதை பதற்றமின்றிக் கையாள வேண்டும். ‘இது உன்னுடைய தவறில்லை’ என்பதை தெரிவித்து, குழந்தைக்கு முழு நம்பிக்கையை அளிக்க வேண்டும்.
பாதிப்பில் இருந்து விலகுவதற்கான சூழலை குழந்தைகளுக்கு ஏற்படுத்தி தந்தால் போதுமானது. மனநல ஆலோசகரிடம் சென்று பெற்றோர், குழந்தைகள் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
அதேபோல, குழந்தைகளின் இயல்பு நிலைகளில் ஏதேனும் வித்தியாசம் தென்பட்டால், அவர்களுடன் அன்புடன் பேசி, காரணங் களைக் கண்டறிய வேண்டும்.
அதைவிடுத்து, உளவு பார்க்கும் விதமாக செயல்பட்டால், அவை குழந்தைகள் தவறான வழிகளில் செல்ல வழிவகை செய்துவிடும். மேலும், குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டங்களை மத்திய, மாநில அரசுகள் இன்னும் கடுமையாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.