

வங்கிகளில் இருந்து அழைப்பதாக கூறி கோவையில் மூத்த குடிமக்களை குறிவைத்து நடைபெறும் பண மோசடி விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சென்னையில் ஓய்வு பெற்ற மத்திய அரசு அலுவலரிடம் வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.53 லட்சம் மோசடியாக எடுக்க முயற்ச்ி நடந்தது. ஆனால் அந்த பணத்தை சேமிப்பு கணக்குக்கு மாற்றி பின்னர்தான் பணத்தை எடுக்க முடியும் என்ற நிலை இருந்ததால், சைபர் கிரைம் போலீஸார் நடவடிக்கையால் பணம் மீட்கப்பட்டது.
இதேபோல் அனைத்து வழக்குகளிலும் நடைபெறுவதில்லை. கோவை இடிகரை செங்காளிபாளையம் பகுதியில் உள்ள தனியார் குடியிருப்பை சேர்ந்த மூதாட்டியிடம் கடந்த 2 தினங்களுக்கு முன் தொலைபேசியில் வங்கியிலிருந்த பேசுவதாக கூறிய நபர் ஒருவர், வங்கிக்கணக்கு விவரங்களை பெற்று, மூதாட்டியின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணையில் உள்ளது.
மேலும் அதே குடியிருப்பில் வசிக்கும்மூத்த குடிமக்கள் பலருக்கும் வங்கியிலிருந்து பேசுவதாக கூறி தொடர்ந்து அழைப்புகள் வந்த நிலையில் இருப்பதால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கூறுகிறார் அந்த குடியிருப்பின் குடியிருப்போர் நல சங்க தலைவர் டி.முத்தையா.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: எனக்கும் ஓரிரு தினங்களுக்கு முன் இதேபோன்ற அழைப்பு வந்தது. பாரத ஸ்டேட் வங்கியிலிருந்து பேசுவதாகவும், ஏடிஎம் கார்டு அனுப்பினோம் கிடைத்ததா என அழைப்பில் பேசியவர் கேட்டார். எனக்கு பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு இல்லை என தெரிவித்தேன். உடனே அவர், பரவாயில்லை, நாங்கள் வேறு வங்கிகளின் கணக்குகளையும் அப்டேட் செய்து தருகிறோம். வங்கிக்கணக்கு விபரத்தை தருமாறு கேட்டார். நான் உடனடியாக காவல் துறையில் புகார் அளிப்பதாக கூறியவுடன் இணைப்பை துண்டித்து விட்டார்.
எங்களது குடியிருப்பில் வசிப்போர், பெரும்பான்மையானோர் மூத்த குடிமக்கள். இவர்களை குறிவைத்தே இத்தகையஅழைப்புகள் வருகின்றன. கடந்த ஒருவாரத்தில் 15 பேருக்கு மேல் வங்கிக்கணக்கு விவரங்களை கேட்டு அழைப்புகள் வந்து விட்டன. மூத்த குடிமக்களின் விவரங்கள் எப்படி மோசடி பேர்வழிகளுக்குகிடைக்கின்றன என்று தெரியவில்லை.குடியிருப்பில் வசிக்கும் அனைவரிடமும் இவ்வகை அழைப்புகள் வந்தால், எந்த விவரங்களையும் அளிக்க வேண்டாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்' என்றார்.
தகவல் கசிய வாய்ப்பில்லை
இதுதொடர்பாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் எல்.ஈஸ்வரமூர்த்தியிடம் கேட்டபோது, 'வங்கிகள் தரப்பிலிருந்து தகவல்கள் கசிய வாய்ப்பில்லை. இணைய தொடர்புகள் மூலமாக அழைப்பு எண்களை சேகரித்து இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் எந்த தகவலையும் அவர்களிடம் கூறக்கூடாது. அழைப்பு வரும் எண்களை காவல் துறையில் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.
இதுகுறித்து கோவை சைபர் கிரைம் அதிகாரிகள் தரப்பில் பேசியபோது, 'இணைய மோசடிகள் இப்படித்தான் நடைபெறுகிறது என குறிப்பிட்டு எதையும் கூறிவிட முடியாது. நாள்தோறும் புதிய புதியவழிகளில் நூதன முறைகளில் மோசடிகள் நடைபெறுகின்றன. மோசடிகளை காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த மோசடிகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக்கு கொள்ள வேண்டும்.
இணைய பயன்பாட்டில் கவனம் தேவை
உதாரணமாக இணையவழியில் பொருட்களை வாங்குவோர் பாதுகாப்பான நம்பிக்கைக்குரிய இணையதளங்கள் மூலமாக பொருட்களை வாங்க வேண்டும். இதன் மூலமாக மோசடிகளில் இருந்து தப்பிக்கலாம். சமூக தளங்களை பயன்படுத்தும் போதும் கவனம் இருக்க வேண்டும். சமூக தளங்களின் நெட்வொர்க் சர்வதேச அளவில் செயல்படும் நிறுவனங்களிடம் இருப்பதால், அந்த நிறுவனங்களிடம் இருந்து, உரிய விவரங்களைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. எனவே மக்கள் உரிய விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற அழைப்புகள் வந்தால் உடனடியாக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.