கபிஸ்தலத்தில் கரோனாவால் உயிரிழந்ததை மறைத்து முதியவர் சடலத்தை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு: மனைவி, மகன் மீது வழக்கு பதிவு

கபிஸ்தலத்தில் கரோனாவால் உயிரிழந்ததை மறைத்து முதியவர் சடலத்தை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு: மனைவி, மகன் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் கரோனாவால் முதியவர் உயிரிழந்ததை மறைத்து, சடலத்தை வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு நடத்திய மனைவி, மகன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் வடக்கு முதலியார் தெருவைச் சேர்ந்தவர் ராமசாமி(69). இவர், கோ-ஆப்டெக்ஸில் மேலாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி பிச்சையம்மாள்(61). இவர்களின் மகன் முருகானந்தம் ஊட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வருகிறார்.

ராமசாமி, பிச்சையம்மாள் ஆகிய இருவருக்கும் மே 25-ம் தேதி கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மே 28-ம் தேதி ராமசாமி உயிரிழந்தார்.

இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியாமல் ராமசாமியின் மனைவி பிச்சையம்மாள், மகன் முருகானந்தம் ஆகியோர், ராமசாமியின் சடலத்தை ஆம்புலன்ஸில் ஏற்றி ஊருக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடம் ராமசாமி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டதாகக் கூறி, வீட்டிலேயே ராமசாமியின் சடலத்தைக் குளிப்பாட்டி, இறுதிச்சடங்குகளை செய்து, மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்துள்ளனர்.

அதன்பிறகு, தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் சிவப்பிரகாசம் இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின்பேரில், கரோனா தொற்றால் உயிரிழந்தவர் குறித்த தகவலை மறைத்து, இறுதிச் சடங்கு நடத்தி, தொற்று பரவ காரணமாக இருந்ததாகக் கூறி, பிச்சையம்மாள், முருகானந்தம் ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மருத்துவமனையில் இருந்து ராமசாமியின் சடலத்தை எடுத்து வந்தது தொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்தினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

200 பேருக்கு பரிசோதனை

கரோனா தொற்றால் ராமசாமி உயிரிழந்தது தெரியாமல், அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் பீதியடைந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் கடந்த 2 நாட்களாக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் மருத்துவ முகாம் நடத்தி, 200 பேருக்கு கரோனா பரிசோதனை செய்துள்ளனர்.

மேலும், ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் சார்பில், அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தடுப்புகளால் அடைக்கப்பட்டு, கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in