

கோவையில் குடியிருப்பு பகுதியில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி தமிழக முதல்வரிடம் பெண்கள் நேற்று மனு அளித்தனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பெண்கள் சிலர் முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்திருப்பதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர். ஆனால் திட்டமிடல் இல்லாத காரணத்தால் போலீஸார் அவர் களுக்கு அனுமதி மறுத்தனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனிடையே ஆய்வுப் பணியை முடித்து விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்த முதல்வர் காரை நிறுத்தி அப்பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
“நாங்கள் மாநகராட்சி 57-வது வார்டு பாரதி நகரில் வசிக்கிறோம். அங்கு கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளை கிருமிநாசினி தெளிக்கவும், தொற்று தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவும், குடியிருப்பு பகுதிக்கு காய்கறி வாகனங்களை முறைப்படி அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறி மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர், உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.