

மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் எம்.தமிமுன் அன்சாரி நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாள், எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு மனிதாபிமான அடிப்படையில் முன் விடுதலை செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது.
புதிதாக முதல்வராக பொறுப்பேற்று, அனைவரும் பாராட்டும் வகையில் செயல்பட்டு வரும் மு.க.ஸ்டாலின், கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகின்ற ஜூன் 3-ம் தேதி இத்தகைய அறிவிப்பை வெளியிட்டால் இந்த ஆட்சிக்கு அது மேலும் சிறப்பு சேர்க்கும்.
சிறை தண்டனையின் நோக்கமே ஒருவரை திருத்தி, மீண்டும் சமூகத்துடன் வாழச் செய்வதே ஆகும். அந்த அடிப்படையில் சிறைவாசிகளின் எஞ்சிய கால வாழ்வில் வசந்தம் ஏற்படவும், அவர்களது குடும்பங்களில் மறுமலர்ச்சி ஏற்படவும் முதல்வர் ஸ்டாலின், கருணை உள்ளத்தோடு நல்லதொரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.