கல்வராயன்மலையில் அழிக்க அழிக்க குறையாத கள்ளச்சாராய உற்பத்தி

கல்வராயன்மலையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊரல்களை அழிக்கும் போலீஸார்.
கல்வராயன்மலையில் கள்ளச்சாராய வியாபாரிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய ஊரல்களை அழிக்கும் போலீஸார்.
Updated on
1 min read

கல்வராயன்மலையில் போலீஸார் அவ்வப்போது சோதனை நடத்தி கள்ளச்சாராய ஊரல்களை அழித்து வந்த போதிலும், கள்ளச்சாராய உற்பத்தி குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கரோனா 2-ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், மாநில அரசு முழு பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைக்கான பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டதால் மது அருந்துவோர் மாற்று வழியில் மதுவை தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் காய்ச்சுவதில் பிரபலமாக விளங்கும் பகுதிகளில் ஒன்றான கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில், தற்போது கள்ளச்சாராய உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும், அங்கிருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு இருசக்கர வாகனங்கள் மூலம் விநியோகிக்கப்படுவதாக கல்வராயன்மலை வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி மாவட்டக் காவல் துறையும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையினரும் கல்வராயன்மலையில் தொடர் சோதனையில் ஈடுபட்டு சாராய ஊரல்களை அழித்து வருகின்றனர்.

மாவட்டக் காவல்துறை ஊரடங்கில் கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் விதமாக தனிப்படை அமைத்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக 183 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4,318 லிட்டர் கள்ளச்சாராயமும், 30,680 லிட்டர் சாராய ஊரல்களையும் அழித்துள்ளனர். இதுவரை 183 பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடை மூடப்பட்ட நிலையில் கள்ளச்சாராயத்தை மது அருந்துவோர் நாடுவதால், கள்ளச்சாராய உற்பத்தியாளர்கள் மலையில் கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு கள்ளச்சாராயத்தை உற்பத்தி செய்து வருகின்றனர். இவற்றை லாரி டியூப்கள் மூலம் மலையடிவாரத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். மதுவிலக்குப் போலீஸார் ஒருபுறம் கட்டுப்படுத்தினாலும், உள்ளூர் காவல்நிலையத்தில் உள்ள சில போலீஸாரின் துணையுடன் கள்ளச்சாராயம் கடத்தப்படுவதால், கள்ளச்சாராயம் விற்பனையை போலீஸார் கட்டுப்படுத்துவது சிரமமாக உள்ளதாக மலையடிவார மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in