

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மற்றும் கடலூரில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டு அம்மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட இன்று காலை தமிழகம் வந்தடைந்தார்.
சென்னை வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி சென்றார். காரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட அவர் ரேடியோ மில் ரயில்வே கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
பின்னர் ரியான்குப்பம், கிரிமாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்ற அவர் அங்கிருந்த மக்களை சந்தித்து அரிசி, உடை உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார்.
புதுச்சேரியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மிதமான சாரல் மழை பெய்த நிலையில் அதில் நனைந்தபடியே நிவாரணங்களை ராகுல் காந்தி வழங்கினார்.
அவருடன் காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் ஏ.நமசிவாயம், நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
இதனை அடுத்து மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் கடலூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளை பார்வையிட்டார்.
ஹெலிகாப்டர் மூலம் சென்னை வரும் அவர், மேற்கு தாம்பரம், முடிச்சூர், வில்லிவாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளார்.
பின்னர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வீடுகளை இழந்து தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.