

வத்தலகுண்டு அருகே வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் ஆண்டிபட்டி திமுக எம்.எல்.ஏ. காயங்களுடன் தப்பினார்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன். இவர் சொந்த வேலையாக திண்டுக்கல்லுக்கு நேற்று காரில் சென்றார்.
வத்தலகுண்டு புறவழிச் சாலையில் சென்றபோது சாலையின் குறுக்கே மினி லாரி ஒன்று கடந்து செல்ல முயன்றது. அப்போது தேனியில் இருந்து திண்டுக்கல் சென்ற கார் மினி லாரி மீது மோதியது. பின்னால் வந்த மகாராஜன் எம்எல்ஏ காரும் அந்த கார் மீது மோதியது. இதில் லேசான காயங்களுடன் எம்எல்ஏ உயிர் தப்பினார். வாழைத்தார் ஏற்றி வந்த மினி லாரியில் பயணம் செய்த 5 பெண் தொழிலாளர்கள் காயமடைந்தனர். அவர்களை சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு மகாராஜன் எம்எல்ஏ அனுப்பி வைத்தார்.
வத்தலகுண்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.