

தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதியை மீண்டும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.
திருநெல்வேலி ரெட்டியார்பட்டி யில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையம் மற்றும் மேலப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஆவின் விற்பனை நிலையங்களை அவர் பார்வையிட்டார்.
பின்னர் அமைச்சர் கூறும்போது, “தற்போது தமிழகத்தில் ஆவின் பால் உற்பத்தி 36 லட்சம் லிட்டரிலிருந்து 39 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் 362 ஆவின் பால் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தேவைக்கேற்ப இவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்ததால் சென்னையில் 11, தஞ்சாவூரில் 2 விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
கூடுதல் விலைக்கு பால் விற்பனை செய்தால் அதுகுறித்து ஆய்வு செய்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பால், காய்கறி, தண்ணீர் போன்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்து விற்பதால் அரசுக்கு ரூ.270 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த இழப்பை சரிக்கட்டுவதற்கு பால் உற்பத்தியை அதிகரித்து, பால் உபரி பொருட்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்பட்டது. மீண்டும் ஏற்றுமதியை தொடங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது” என்றார்.
பால்வளத் துறை ஆணையாளர் நந்தகோபால், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், சட்டப்பேரவை முன்னாள் தலைவர் இரா.ஆவுடையப்பன் உடனிருந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஆவின் பாலகங்களில் அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு மேற்கொண்டார்.