Published : 30 May 2021 06:58 PM
Last Updated : 30 May 2021 06:58 PM

கோவையை எந்நாளும் நாங்கள் புறக்கணிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை

எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே என எண்ணும்படியும் எங்கள் பணி அமையும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தேன். அதையேதான் இன்றும் சொல்கிறேன். எந்த பாரபட்சமும் நிச்சயம் காட்டமாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

கோவையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:

“இன்று ஆய்வுப் பணியில் ஈடுபட்டு புதிய ஆக்சிஜன் படுக்கைகள், கார் ஆம்புலன்ஸ் வசதியைத் தொடங்கி வைத்துள்ளேன். மருத்துவர்களைப் போலவே பிபிஇ கிட் அணிந்து நோயாளிகளைச் சென்று பார்த்தேன். அங்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை, மருத்துவப் பணியாளர்களைச் சந்தித்துப் பேசினேன். இந்த பிபிஇ கிட் அணிந்து பணியாற்றுவது எவ்வளவு சிரமம் என்பது அதை அணியும்போதுதான் தெரிந்தது.

அதை தினமும் பல மணி நேரம் அணிந்து பணியாற்றும் அவர்களைப் பாராட்ட வேண்டும். அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை, உற்சாகத்தை ஊட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தினருக்கும் உற்சாகம் ஊட்ட நானும் பிபிஇ உடையணிந்து சென்றேன் என்பது உங்களுக்குத் தெரியும்.

அதுமட்டுமல்ல கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நீலகிரி இந்த 5 மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகளுடன் நானும் அமைச்சர்களும் ஆலோசனை நடத்தினோம். கர்நாடகா 50 ஆயிரம் எனும் உச்ச நிலையைத் தொட்டது. கேரளம் 43 ஆயிரம் என்கிற உச்ச நிலையைத் தொட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை 36 ஆயிரம் என்கிற நிலையில் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.

24ஆம் தேதி போடப்பட்ட ஊரடங்கு காரணமாக கரோனா தொற்று குறைந்துள்ளது. குறிப்பாக சென்னையில் அதிக அளவில் குறைந்தது. ஆனாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகம் உள்ளது. சென்னையை விட கோவையில் தொற்று அதிகம் என்கிற நிலை கடந்த சில நாட்களாக உள்ளது. அரசு எடுத்துவரும் நடவடிக்கை காரணமாக தொற்று சற்று குறைந்து வருகிறது.

கோவையில் அமைச்சர்கள் ராமச்சந்திரன், சக்ரபாணி ஆகியோர் தொற்றுக் குறைப்புப் பணியால் இங்கேயே தங்கி வருகிறார்கள். கடந்த 27ஆம் தேதி சில மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினேன். சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு அவர்கள் கடமையாற்றி வருகிறார்கள். மாநிலம் தழுவிய வார் ரூம் போல் கோவையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் தேதி முதல் அதிக அளவில் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்து வருகிறோம். இதுவரை கோவை மாவட்டத்தில் 5,85,703 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இதுவரை 1 லட்சத்து 51 ஆயிரத்து 61 பேருக்குத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. கோவையில் இன்று படுக்கை வசதி இல்லை, ஆக்சிஜன் இல்லை என்கிற நிலை இல்லை.

கரோனா பணியில் கோவை புறக்கணிக்கப்பட்டதாக சிலர் புகார் சொல்கிறார்கள், நானும் கேள்விப்பட்டேன், சொல்பவர்கள் அரசியல் நோக்கத்துக்காகச் சொல்லலாம். ஆனால், நான் அரசியல் பேச விரும்பவில்லை. அப்படிச் சொல்பவர்கள் இங்கு நாங்கள் செய்துள்ள உட்கட்டமைப்பு வசதிகளைப் பார்வையிட்டால் இந்த விமர்சனத்தை வைக்கமாட்டார்கள் என நம்புகிறேன்.

சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டத்தில்தான் அதிக அளவில் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. கோவை மட்டுமல்ல எல்லா ஊரும் எங்கள் ஊர்தான். எந்த பாரபட்சமும் நாங்கள் பார்ப்பது கிடையாது. நான் தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியபோது பத்திரிகையாளர்களிடம் நான் சொன்னது, எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையிலும், வாக்களிக்காதவர்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையே என எண்ணும்படியும் எங்கள் பணி அமையும் என்றேன். அதையேதான் இன்றும் சொல்கிறேன், எந்த பாரபட்சமும் நிச்சயம் காட்டமாட்டோம் என்று சொல்கிறேன்.

கரோனா பாதித்தவர்கள் உரிய முறையில் சிகிச்சைக்கு வரவேண்டும். கரோனாவை யாருக்கும் தரமாட்டோம், யாரிடமிருந்து பெறவும் மாட்டோம் என உறுதி எடுக்க வேண்டும். ஒரே நாளில் 3 லட்சம் தடுப்பூசிகள் போடுகிறோம். ஒரே நாளில் 1.70 லட்சம் பேருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்கிறோம். இந்தியாவிலேயே அதிக அளவில் ஆக்சிஜன் படுக்கை வசதிகள் வைத்துள்ளோம்.

அரசும் மக்களும் சேர்ந்தால் கரோனா மட்டுமல்ல, எந்த நோயையும் வெல்லலாம். இதை ஊடகங்கள் மக்கள் மனதில் உருவாக்க வேண்டும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x