Published : 30 May 2021 05:54 PM
Last Updated : 30 May 2021 05:54 PM

கரோனா வார்டுக்குள் சென்றது ஏன்?- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

சென்னை

முதல்வர் ஸ்டாலின் தனது வயது, உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் கரோனா வார்டுக்குள் பிபிஇ கிட் அணிந்து சென்று தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்தித்து உரையாடினார். மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ள இந்த விவகாரத்தில், தான் ஏன் பிபி இ கிட் அணிந்து வார்டுக்குள் சென்றேன் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த நேரத்தில் முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் ஆலோசனைக் குழுவுடன் ஆலோசனை மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

கரோனா தொற்றும் குறைந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் பல்வேறு ஆய்வுக் கூட்டங்கள், நேரடியாக மாவட்டங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது என கரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியை முடுக்கி வருகிறார். இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது.

இதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கவனம் செலுத்த அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டுள்ளார். இன்று கோவைக்கு நேரில் சென்ற அவர் ஆய்வு நடத்தினார். கோவையில் கார் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு நேரில் ஆய்வுக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், மருத்துவர்கள் அணியும் பிபிஇ பாதுகாப்பு உடையை அணிந்து கரோனா நோயாளிகள் வார்டுக்குச் சென்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். முதல்வரின் இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் மற்றவர்கள் அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொன்னாலும், தான் ஏன் பிபிஇ கிட் அணிந்து கரோனா வார்டுக்குள் சென்றேன் என ஸ்டாலின் விளக்கியுள்ளார். முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டோர், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே சென்றதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவு:

“#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும். தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!

#Covid19 வார்டுக்குள் செல்ல வேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும் தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர் தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இப்பெருந்தொற்றை நாம் வெல்வோம்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x