Last Updated : 30 May, 2021 02:56 PM

 

Published : 30 May 2021 02:56 PM
Last Updated : 30 May 2021 02:56 PM

மலை கிராம மக்களுக்கு 50 படுக்கை வசதியுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம்: திருப்பத்தூரில் திறப்பு

திருப்பத்தூர் அடுத்த புதூர்நாடு மலை கிராமத்தில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா மொத்த பாதிப்பு 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது. 17 ஆயிரம் பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 4,430 பேர் 4 அரசு மருத்துவமனைகள் மற்றும் 25 சிறப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நகர்ப்புறங்களைக் காட்டிலும் கிராமப் பகுதிகளிலும், மலைப் பகுதிகளிலும் கரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. தொழில், வியபாரம் நிமித்தமாக அடிக்கடி நகர்ப்புறங்களுக்கு வந்த கிராம மக்கள் கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிக்காததால் தற்போது கிராமப் பகுதிகளில் நோய்ப் பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, சுகாதாரப் பணியாளர்கள் தலைமையில் அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் திருப்பத்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் வீடு, வீடாகச் சென்று கரோனா பாதிப்பு குறித்த கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர்.

மேற்கத்தியானூர் கிராமத்தில் தடுப்பூசி முகாமை எம்.பி., எம்எல்ஏ ஆய்வு செய்தனர்.

50 வீடுகளுக்கு ஒரு பணியாளர் என்ற வீதத்தில் கணக்கெடுப்புப் பணிகள் தற்போது கிராமப் பகுதிகளில் தீவிப்படுத்தப்பட்டுள்ளன. வீடு, வீடாகச் செல்லும் சுகாதாரப் பணியாள்கள் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பு உள்ளவர்கள் யார், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் விவரம், நகர்ப்புறங்களுக்கு அடிக்கடி வந்து செல்வோர்களின் விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் உள்ளவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக மலை கிராமங்களிலேயே சிறப்பு சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும் என ஆட்சியர் சிவன் அருள் கூறியதைத் தொடர்ந்து திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதூர் நாட்டில் 50 படுக்கை வசதிகள் கொண்ட கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் சார் ஆட்சியர் வந்தனாகர்க் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் தங்கய்யா பாண்டியன் முன்னிலை வகித்தார். முன்னதாக, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் வரவேற்றார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு புதூர்நாடு கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, திருப்பத்தூர் அடுத்த அங்கநாதவலசை மற்றும் மேற்கத்தியானூர் கிராமங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை சார் ஆட்சியர் வந்தனாகர்க், டிஆர்ஓ தங்கய்யா பாண்டியன், எம்.பி., சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ நல்லதம்பி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி, பொதுமக்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x