Published : 30 May 2021 02:36 PM
Last Updated : 30 May 2021 02:36 PM

கருப்புப் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை, கரோனாவின் தொடர்ச்சியாக வரும் கருப்புப் பூஞ்சை நோய்க்கு பலியாகும் முன்களப் பணியாளர்களுக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“கரோனாவைத் தொடர்ந்து கருப்புப் பூஞ்சை நோய் அச்சுறுத்தி வரும் நிலையில், அதற்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான அளவு மருந்தினை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நோயினால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது, கையிருப்பில் உள்ள மருந்து போதுமானதாக இல்லை என்ற செய்தி கவலை அளிக்கிறது. எனவே, கருப்புப் பூஞ்சை நோயினைக் கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு இன்னும் தீவிரமாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருந்து கருப்புப் பூஞ்சையைக் கண்டறிதல், அதனால் பாதிக்கப்பட்டோருக்குத் தாமதமின்றி சிகிச்சை அளித்தல் ஆகியவற்றுக்கு மாவட்டம்தோறும் தனி ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும்.

மேலும், கருப்புப் பூஞ்சை நோய்க்கு அரசு கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராகப் பணியாற்றிய பெண் ஒருவரே முதல் பலியாகி இருப்பதால், அம்மா மருந்தகங்கள் மற்றும் கூட்டுறவு மருந்தகங்களில் பணிபுரியும் மருந்தாளுநர்களையும் கரோனா தடுப்பு முன்களப் பணியாளர்களாகத் தமிழக அரசு அறிவித்திட வேண்டும்.

இது மட்டுமின்றி, கரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடுகளை, கரோனாவின் தொடர்ச்சியாக வரும் கருப்புப் பூஞ்சை நோய்க்கு பலியாகும் முன்களப் பணியாளர்களுக்கும் தமிழக அரசு வழங்கிட வேண்டும்”.

இவ்வாறு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x