

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதி கொண்ட கரோனா கூடுதல் சிறப்பு சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தமிழகத்தின் 6 மாவட்டங்களில் தொற்றின் தாக்கம் வெகுவேகமாகப் பரவி வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சம்பந்தப்பட்ட ஈரோடு, திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்கள் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கை வசதியைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து தொற்றாளர்களை அழைத்துச் செல்லவும், அறிகுறி இருப்பவர்களை ஆய்வகத்துக்கு அழைத்துச் செல்லவும் மாவட்டத்தில் 20 கார் ஆம்புலன்ஸ் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், தெற்கு தொகுதி எம்எல்ஏ க.செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.