

ஊரடங்கை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களுகு 14 நாட்களுக்கு கரோனா தடுப்பு தன்னார்வலர் பணி என்ற நூதன தண்டனையை புதுச்சேரி போலீஸார் தந்தனர். இளைஞர்கள் இன்று முதல் பணியைத் தொடங்கினர்.
புதுச்சேரியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நண்பகல் 12 மணி வரை பகுதி நேர ஊரடங்கு உள்ளது. தற்போது கரோனா தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை குறைந்தாலும் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிக அளவிலேயே உள்ளது. அதே நேரத்தில் பகுதி நேர ஊரடங்கின்போது வீட்டிலிருந்து வெளியே உலா வருவோரும், வாகனங்களில் செல்வோரும், அலட்சியமாக இருப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருப்பதால் போலீஸார் கட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
மாலை நேரங்களில் பல இடங்களில் சமூக இடைவெளியின்றிப் பலரும் விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பதாகத் தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாருக்கு உயர் அதிகாரிகள் இதுபோல் நிகழாமல் இளையோர் தொற்றுக்கு ஆட்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
இந்நிலையில் உருளையன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சஜித், நேற்று மாலை ஏ.எப்.டி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்களைப் பிடித்தார். அவர்களிடம் இருந்த கிரிக்கெட் பேட், பந்து உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு, ‘கரோனா விதிமுறைகளைக் கடைப்பிடிப்போம். ஊரடங்கு விதிகளை மதிப்போம்’ என்று உறுதிமொழி எடுக்க வைத்தார்.
ஊரடங்கில் போலீஸார் என்னென்ன பணிகள் செய்கிறார்கள் என்பதை உணர்த்த இரண்டு வாரங்கள் காவல்துறையினருடன் இணைந்து ஊரடங்கில் கரோனா பணியில் தன்னார்வலர்களாக ஈடுபட வேண்டும் என்று இளைஞர்களுக்கு உத்தரவிட்டார். கிரிக்கெட் விளையாடிய இளைஞர்களும் அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் போலீஸாருடன் இணைந்து தன்னார்வலர்களாகப் பணியைத் தொடங்கினர். கரோனா விதிமுறைகள், ஊரடங்கு விதிமுறைகளை மக்களுக்குத் தெரிவிப்பது, சமூக இடைவெளி இல்லாதோர், முகக் கவசம் அணியாமல் இருப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது என முழு தன்னார்வலராகப் பணிபுரியத் தொடங்கினர்.