Published : 30 May 2021 03:11 AM
Last Updated : 30 May 2021 03:11 AM

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் தயங்குவது ஏன்?

இந்தியாவில் கரோனா 2-வது அலையின் கடுமையான தாக்கத்துக்குமுன்பே தடுப்பூசி போடும் பணிதொடங்கியது. ஆனால் மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுவதைக் காண முடிகிறது.

இவ்வாறு தயங்குவதற்கான காரணங்களையும் தயக்கத்தின் அளவையும் கண்டறிய 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடையே ஓர் நிகழ்நிலை (online) ஆய்வு நடத்தப்பட்டது. இந்த வயது பிரிவினருக்கு சமீபத்தில்தான் தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. எனவே, இந்த வயதினரிடையே ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவு, மக்களின் தயக்கத்தை போக்கஎன்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசும் மனநல வல்லுநர்களும் முடிவு செய்ய உதவிகரமாக இருக்கும்.

இந்த ஆய்வில் தமிழ்நாட்டில் உள்ளஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்றுள்ளனர். இதில் 20 சதவீதத்தினர் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ளதயக்கம் இல்லை அல்லது தயக்கம்குறைவாக உள்ளதாகக் கூறியுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ள மிதமான (60%) அல்லது அதிக (20%) தயக்கம்இருப்பதாக 80 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் 20 சதவீதத்தினர் மட்டுமே தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. 60 சதவீதத்தினர் மனதளவில் சிறிது குழப்பத்துடனோ அல்லது தீர்மானிக்க முடியாத நிலையிலோ உள்ளனர்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 2 தடுப்பூசிகளும் 60 முதல் 85 சதவீதம் செயல்திறன் உடையதாக இருப்பதால் இன்னும் அதிக செயல்திறன் உடைய தடுப்பூசிக்காக காத்திருப்பதாக ஆய்வில்பங்கேற்றவர்களில் பலர் கூறியுள்ளனர்.

அதேபோல தடுப்பூசிகளைப் பற்றியஎதிர்மறை தகவல்களே தயக்கத்துக்குக் காரணம் என பலர் கூறியுள்ளனர். மூன்றாவதாக பக்க விளைவுகள் குறித்து பயப்படுவதாக சிலர் கூறியுள்ளனர். தயக்கத்திற்கு மற்றொரு குறிப்பிடத்தக்க காரணம் தடுப்பூசி மீதான நம்பிக்கை ஆகும். தடுப்பூசி தங்களைப் பாதுகாக்கும் என்று 30% மக்கள் மட்டுமே நம்புகிறார்கள். ஐந்தாவதாக, தடுப்பூசி ஒரு நிரந்தரத் தீர்வு அல்ல என்று கருதுகின்றன்றனர்.

தடுப்பூசி போட்டுக்கொள்வதில் பொதுமக்களுக்கு உள்ள தயக்கத்தைப் போக்க உரிய ஆலோசனை வழங்க வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது. மருத்துவர்கள், மனநல வல்லுநர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.அவர்கள் மக்களிடம் உள்ள தயக்கத்தைப் போக்கி, தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை புரியவைக்க வேண்டும். இதில் மனநல வல்லுநர்களின் ஆலோசனை மிகவும் அவசியமாகிறது.

அதிக செயல் திறன் உடைய தடுப்பூசிக்காக காத்திருப்பதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் பலர் கூறியுள்ளனர். இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் செயல்திறன் பற்றி மக்களிடையே எடுத்துரைக்க வேண்டும். மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுவதையும் இறப்பு விகிதத்தையும் குறைக்க முடியும் என்று அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.

அதேபோல 2-வது முக்கிய தடைக்கல்லாக இருப்பது எதிர்மறையான தகவல்களால் உருவாகும் பயம். நமது எண்ணங்களும் உணர்வுகளும்தான் நம் நடத்தைக்கு வழிவகுக்கிறது. ஆகவே தடுப்பூசி பற்றிய தவறான தகவலை மக்கள் மனதிலிருந்து அகற்றி உண்மையை உளவியலாளர்கள் மூலம்எடுத்துரைக்க வேண்டும். கரோனா பற்றிய உண்மையான மற்றும் அங்கீகரிக்கப்படாத தகவல்கள் வைரஸைவிட வேகமாக பரவுகிறது. தொற்றுநோய்க்கு எதிராக மட்டுமல்லாமல், நம்பகமற்ற (இன்போடெமிக்) தகவல்களுக்கு எதிரான சவாலையும் அரசு சந்தித்துக்கொண்டிருக்கிறது. இது தொற்றுநோயை விட ஆபத்தானது.

கரோனா தடுப்பூசி மட்டுமல்ல, எந்தவொரு தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிறகும் லேசான பக்கவிளைவுகள் ஏற்படும் என்பதை மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். இருப்பினும், தடுப்பூசி போட்ட பிறகு ஏற்படும் அனைத்து அறிகுறிகளும் தடுப்பூசியின் பக்கவிளைவே என எடுத்துக்கொள்ள முடியாது. ஆகவே, தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவுகளை மருத்துவர்கள் முன்னரே தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

நான்காவது காரணம் தடுப்பூசி குறித்து நம்பிக்கை இல்லாதது. தடுப்பூசி போட்ட பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் அனுபவத்தை எடுத்துரைத்து அதை முன்னுதாரணமாகக் காட்டி, நம்பகத்தன்மையை உருவாக்க வேண்டும். தடுப்பூசி போட்ட பிறகும் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஊடகங்களில் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள ஏற்பாடு செய்யவேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவமனையில் சேர்வதை தவிர்க்கவும் இறப்பை தடுக்கவும் முடியும் என்ற தகவலை சமூக ஊடகங்களில் வெளியிடலாம்.

தடுப்பூசி நிரந்தர தீர்வு அல்ல என்று நம்புபவர்களைப் பொறுத்தவரை, தடுப்பூசி ஒரு தடுப்பு நடவடிக்கைதான் என்றும் கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் நோயின் தாக்கம் குறைவாக இருக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இயற்கையாகவே அதிகநேரம் எடுக்கும் என்பதால் தடுப்பூசிநோய் எதிர்ப்பு சக்தியை குறுகிய காலத்திலேயே அதிகரிக்க உதவுகின்றன. எனவே, தடுப்பூசி மட்டுமே உடனடி தீர்வாக இருக்கும்.

வெற்றிகரமான நோய்த்தடுப்பு செயல்முறைக்கு, பெரும்பான்மையான மக்கள் தடுப்பூசி போடுவதற்கு ஒத்துழைப்பு தருவது அவசியம். தடுப்பூசி மீதான தயக்கத்தைப் போக்கவும் மக்களின் மனதில் உள்ள சந்தேகத்தைப் போக்கவும் மனநல நிபுணர்களின் பங்கு மிகவும் முக்கியமாகிறது.

கரோனாவுக்கு எதிராகப் போராட அரசு கடுமையாக உழைத்து வருவதால், அதற்கு ஒத்துழைப்பு தருவதும் அரசு கூறும் நடைமுறைகளை கடைபிடிப்பதும் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். இது நிச்சயமாக கரோனா தொற்று நோய் சங்கிலியை உடைத்து நம்மையும், நம் அன்புக்குரியவர்கள் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தையும் பாதுகாக்க உதவும்.

- பேராசிரியர் முனைவர். சு.கருணாநிதி, பேராசிரியர் எமரிட்டஸ், உளவியல் துறை, சென்னை பல்கலைக்கழகம், சென்னை.

- முனைவர். சோ.சசிகலா உதவிப் பேராசிரியர்; உளவியல் துறை, சென்னை பல்கலைக்கழகம், சென்னை.

- வே.மு. அபிராமி, ஆராய்ச்ச்சி மாணவி, உளவியல் துறை, சென்னை பல்கலைக்கழகம், சென்னை.

- கோ.சிற்றரசு, ஆராய்ச்சி மாணவர், உளவியல் துறை, சென்னை பல்கலைக்கழகம், சென்னை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x