

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்கக் கோரி நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.ராஜா தெரிவித்தார்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நலக் கூட்டணி சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சுமார் ஆயிரம் பேருக்கு போர்வை உள்ளிட்ட பொருட்களை டி.ராஜா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் நிருபர்களிடம் டி.ராஜா கூறியதாவது:
அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருந்ததே காரணம். அதனால்தான் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இதற்கு தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த திமுக, அதிமுகதான் காரணம்.
வெள்ள பாதிப்புக்காக தமிழகத்துக்கு ரூ.50 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கூறி வருகிறோம். ஆனால், தமிழக அரசு ரூ.5 ஆயிரம் கோடி நிதி கேட்கிறது. இது நிவாரணப் பணிகளுக்கு போதுமானதாக இருக்காது. இதுபற்றி நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். மக்கள் மன்றத்திலும் இதற்காக போராடுவோம்.
இவ்வாறு டி.ராஜா கூறினார்.