

கருப்பு பூஞ்சை நோய்க்கான சிகிச்சையை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்,அரசு ஊழியர்களின் காப்பீட்டுத் திட்டங்களில் சேர்க்க வேண்டும்என்று முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் இதுவரை 11,717 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.குறிப்பாக, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் கருப்புபூஞ்சை நோயால் 226 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சூழலில், ஒசூரில் கருப்பு பூஞ்சை வேகமாகப் பரவுவதாகவும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாவதாகவும், அதற்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து இல்லை என்றும், ஒரு டோஸ் பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் செய்திகள் வருகின்றன.
எனவே, வருமுன் காப்போம் என்பதற்கு இணங்க அரசின் செயல்பாடுகள் இருப்பது அவசியம். இதற்கு தேவையான ஆம்போடெரிசின் பி மருந்தை போதிய அளவில் இருப்பு வைத்துக்கொள்ளவும், இந்த நோயை முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவும் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.