

மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு 23 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை பெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறுஇடங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், கரோனா பரிசோதனை மையங்கள், கரோனா சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தோம்.
சென்னையில் ஏற்கெனவே பிரபலமாக உள்ள இனோவா கார் ஆம்புலன்ஸ் திட்டத்தை, திருப்பூர் மாவட்டத்தில் 20 எண்ணிக்கை அளவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொற்று அறிந்ததும் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவும், தொற்று சந்தேகம் இருப்பவர்களை பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லவும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும்.
திருப்பூரை பொறுத்தவரை ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 16 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்துக்கு 95 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வந்ததில், 84 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி தட்டுப்பாட்டை தவிர்க்கும் வகையில் மூன்றரை கோடி தடுப்பூசிகளை பெறும் நடவடிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். 3.5 கோடி தடுப்பூசிகள் உலகளாவிய அளவில் டெண்டர் மூலம் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் 5-ம் தேதி நிறுவனம் முடிவாகி, அவர்களுக்கு பணியாணை வழங்கப்படும். இதையடுத்து அடுத்த 6 மாதங்களுக்குள், 3.5 கோடி தடுப்பூசிகளை நிறுவனம் வழங்க வேண்டும். தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களே இல்லை என்ற நிலை விரைவில் ஏற்படும். மாநில அரசு ரூ.85 கோடி பணம் கட்டி, மத்திய அரசிடம் 23 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளை பெற உள்ளது. ஆக்சிஜன் கையிருப்பும் போதுமான அளவு உள்ளது. 650 மெட்ரிக் டன் அளவு கையிருப்பு உள்ளது.
கருப்பு பூஞ்சையால் திருப்பூர்மாவட்டத்தில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான மருந்து கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, செங்கல்பட்டு தடுப்பூசி வளாக சொத்துகளை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மத்திய அரசு ஒருவாரத்தில் நல்ல முடிவை அறிவிக்கும் பட்சத்தில், தமிழகத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்டு, மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக ஈரோட்டில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மத்திய அரசிடம் 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தடுப்பூசிக்காக ரூ.85 கோடி செலுத்தப்பட்டு, இதன்மூலம் 13 லட்சத்து 85 ஆயிரம் தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும் தடுப்பூசிகள் வர வேண்டியுள்ளது. தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசி பெற டெல்லியில் டி.ஆர்.பாலு முகாமிட்டு உள்ளார்” என்றார்.