

கரோனா தொற்று பாதிப்பில் தமிழகத்தில் 3-ம் இடத்தை எட்டியுள்ளது திருப்பூர் மாவட்டம். நாள்தோறும் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. தொற்றைகட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், சத்தமின்றி இயங்கும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மூலமாகவும் பலருக்கு தொற்று பரவுகிறது. ஏதேனும் ஓரிடத்தில் பாதிக்கப்பட்டால்கூட, பலரும் தொற்றுக்கு ஆளாகும் சூழல் நிலவுகிறது.
மதிக்க வேண்டும்
இதுதொடர்பாக பின்னலாடை நிறுவன ஊழியர்கள் கூறும்போது, "ஊரடங்கு நாட்களிலும், சில இடங்களில் பின்னலாடை நிறுவனங்கள்தொடர்ந்து இயக்கப்படுகின்றன. அதேபோல, விடுதியில் தங்கியிருக்கும் தொழிலாளர்களை வைத்தும் இயக்குகிறார்கள். திருப்பூர் செல்லம்நகர், முருகம்பாளையம், கணியாம்பூண்டி, பல்லடம், அவிநாசி, பெருமாநல்லூர், தாராபுரம் சாலைஉள்ளிட்ட இடங்களில் நிறுவனங்கள்இயக்கப்படுகின்றன. இதனால், தொற்று பாதிப்புக்குள்ளாவோரின்எண்ணிக்கை குறையாத நிலை தொடர்கிறது.
ஊரடங்கை மதித்து பின்னலாடை நிறுவனங்கள் முழுமையாக செயல்படாமல் இருந்தால் மட்டுமே தொற்றின் தீவிரமும், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கையும் வெகுவாக குறையும். திருப்பூர் மாநகரின் மையத்திலுள்ள பிரபல நிறுவனம் ஒன்று, தொடர்ந்து இயங்கி கொண்டுதான் இருக்கிறது" என்றனர்.
நடவடிக்கை இல்லை
கணியாம்பூண்டி பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறும்போது, "எங்கள் பகுதியில் ஊரடங்கை மதிக்காமல் வடமாநிலத் தொழிலாளர்களை வைத்து நிறுவனங்களை இயக்குகிறார்கள். ஒரே இடத்தில் 6 முதல் 10 பேர் வரை தங்குகின்றனர். ஒருவருக்கு தொற்று பரவினாலே,மற்றவர்களுக்கும் எளிதாக பரவிவிடுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியஅதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. கடந்த சில தினங்களுக்கு முன் கரோனா அதிகம் பாதித்துள்ள 6 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘கரோனா தடுப்புநடவடிக்கையாக ஓரிரு வாரங்களுக்கு முனைப்புடன் செயல்பட வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.
மே மாதம் ஊரடங்கு தொடங்கியபோது, திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் அளவுக்கு தொழிலாளர்களின் நடமாட்டமும் இருந்தது. பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதன் ஒரு பகுதியாக, பின்னலாடை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், மாவட்ட நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்காததால், பல்வேறு பகுதிகளில் தற்போதும் நிறுவனங்கள் சத்தமின்றி இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன" என்றனர்.
மக்கள் நடமாட்டம் கூடாது
திருப்பூர் மருத்துவ அலுவலர் ஒருவர் கூறும்போது, "திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மறைமுகமாக இயங்குவதும் தொற்று பரவலுக்கு முக்கியக் காரணம். பெருமாநல்லூர் சாலையில் மாலை நேரங்களில் பலரும் வேலையை முடித்துவிட்டு, இருசக்கர வாகனங்களில் செல்கிறார்கள். பொதுமக்களின் வெளி நடமாட்டத்தை குறைத்தால் மட்டுமே, தொற்றின் எண்ணிக்கையை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர முடியும்" என்றார்.
கண்காணித்து நடவடிக்கை
முன்னதாக, திருப்பூரில் ஆய்வு மேற்கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்மா.சுப்பிரமணியம் நேற்று கூறும்போது, "அரசுக்கு தெரியாமல் சில தொழில் நிறுவனங்கள் இயங்குவதால், திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம்என்ற அச்சம் எழுந்துள்ளது. இதனை ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் கண்காணித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்" என்றார்.