

ஓட்டேரியில் கள்ளச்சந்தையில் மது விற்றவர்களை பிடிக்கச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் உட்பட 3 போலீஸார் மீது தாக்குதல் நடத்திய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் பகுதியில் கள்ளச் சந்தையில் மது விற்பதாகவும், மது வாங்கச் சென்ற சரவண பெருமாள் என்பவரிடம் பணத்தை மட்டும் பறித்துக் கொண்டு அடித்து துரத்தியதாகவும் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.
இதையடுத்து ஓட்டேரி காவல் நிலையத்தில் பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர் சஜீபா, மற்றொரு உதவி ஆய்வாளரான மணிவண்ணன் மற்றும் காவலர் சங்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
தாக்கப்பட்ட சரவண பெருமாளை மீண்டும் மது வாங்குவது போல் அனுப்பிவைத்து, அவரை பின் தொடர்ந்து சென்று, மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த மீசை சேகர் என்பவரை போலீஸார் மடக்கி பிடித்தனர்.
கடும் வாக்குவாதம்
பின்னர், மீசை சேகரை அழைத்துக் கொண்டு அவரது வீட்டுக்குச் சென்று மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா என சோதனை நடத்தினர். அப்போது ஆண்களும், பெண்களும் சேர்ந்த ஒரு கும்பல் உதவி ஆய்வாளர் சஜீபாவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். திடீரென உதவி ஆய்வாளர் சஜீபாவை தாக்கினர்.
அதிர்ச்சியடைந்த சஜீபா, தன்னுடன் வந்த மற்றொரு உதவி ஆய்வாளர் மணிவண்ணன் மற்றும் காவலர்களை உதவிக்கு அழைத்துள்ளார். அங்கு வந்த போலீஸ் வாகனத்தை வழிமறித்து சாவியை பிடுங்கிக் கொண்டும், லத்தியை பறித்துக் கொண்டும் அந்தக் கும்பல் தகராறு செய்துள்ளனர்.
50-க்கும் மேற்பட்ட போலீஸார்..
மேலும், உதவிக்கு வந்த போலீஸாரையும் அந்த கும்பல் தாக்கியுள்ளது. பின்னர் போலீஸார் மீசை சேகரை மட்டும் அழைத்து கொண்டு காவல் நிலையம் வந்து விட்டனர்.
பின்னர் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேற்கு மண்டல இணை ஆணையர் ராஜேஸ்வரி, புளியந்தோப்பு துணை ஆணையர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்துக்குச் சென்றுவிசாரணை நடத்தினர். விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்ட 11 பேரும் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியிருப்பது தெரிய வந்தது.
தேடுதல் வேட்டையில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட கற்பகம், நந்தினி, செல்வி, காஞ்சனா, சசிகலா, மணிகண்டன் உட்பட 8 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.
மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர்கள் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.