

தமிழகத்தில் 50 சித்த மருத்துவ மையங்களில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் 40 படுக்கைகளுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்று முதல் அலையின்போது 13 சித்த மருத்துவ மையங்கள் இருந்தன. தற்போது, 50 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று இறப்பு விகிதத்தை குறைத்துக் காட்டவில்லை. தமிழக அரசு அனைத்து வகையிலும் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு வருகிறது. இதை அரசியலாக்க விரும்பவில்லை. கடந்த ஆண்டு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டபோது, எதிர்க்கட்சிகள் என்ன மருத்துவர்களா? என அப்போதைய முதல்வர் பழனிசாமி கேட்டார். ஆனால், தற்போது அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து, அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மத்தியசென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.