வெள்ள நிவாரண முகாம்கள் 14 ஆக குறைந்தன
சென்னையில் கடந்த 1-ம் தேதி பெய்த கனமழையால், மாநகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தது. பல்வேறு சாலைகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவ்வாறு 97 நிவாரண முகாம்களில் 62 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டனர்.
சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில், நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்ட பொதுமக்கள், முகாமிலிருந்து வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். அதனால் நிவாரண முகாம்களின் எண்ணிக்கை 14 ஆக குறைந்து, தங்க வைக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 902 பேராக குறைந்துள்ளது. அடையாறு மண்டலத்தில் மட்டும் 8 நிவாரண முகாம்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
சென்னையில் கடந்த 7-ம் தேதியிலிருந்து 17-ம் தேதி வரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 452 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அனைத்து வார்டுகளிலும் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
