

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கடந்த இரு வாரங்களில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கரோனாவுக்கான தனி வார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு 250-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன. கரோனா தொற்றால் நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ள பலருக்கு ஆக்சிஜன் செலுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், நோயின் தீவிரம் காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர்.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் கடந்த 25-ம் தேதி 10 பேர், 26-ல் 22 பேர், 27-ல் 9 பேர், 28-ல் 14 பேர், 29-ல் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கு மட்டும் கடந்த இரு வாரங்களில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோல, தனியார் மருத்துவமனைகள், வீட்டிலேயே உயிரிழந்தவர்கள் என மொத்தம் 250-க்கும் அதிகமானோர் கடந்த இரு வாரங்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் நகராட்சி மூலம் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. தேவையின்றி பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என்று காவல் துறை மூலம் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியில் சுற்றுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்தியாவசியத் தேவைகளின்றி யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று மருத்துவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
100 ஆக்சிஜன் சிலிண்டர்கள்
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் அளிக்க, தமிழக அரசு, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ள 750 சிலிண்டர்களில் 100 சிலிண்டர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவற்றை சிப்காட் திட்ட அலுவலர் நளினி, மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் ஒப்படைத்தார். இவை மாவட்ட அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் பயன்படுத்தப்பட உள்ளன.