Published : 14 Jun 2014 09:38 AM
Last Updated : 14 Jun 2014 09:38 AM

செம்மரக் கடத்தலில் சம்பாதித்த பணம் வட்டி தொழிலில் முதலீடு: கரகாட்டக் கலைஞர் மோகனாம்பாள் வாக்குமூலம்

செம்மரக் கடத்தல் தொழிலில் சரவணன் சம்பாதித்த கோடிக் கணக்கான பணத்தை வட்டி தொழி லில் முதலீடு செய்து இருமடங் காக்கினேன் என்று கரகாட்ட மோகனாம்பாள் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

வேலூர் கஸ்பா சுப்பிரமணிய ஐய்யர் தெருவைச் சேர்ந்தவர் மோகனாம்பாள் (53). இவர் கடந்த 3 மாதங்களாக காட்பாடி தாராபட வேடு பகுதியில் ஜமுனா என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்த வீட்டில் மே 25-ம் தேதி காட்பாடி போலீஸார் நடத்திய திடீர் சோதனையில் ரூ.4 கோடியே 4 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரொக் கம், 73 பவுன் தங்க நகைகள், அடமான பத்திரங்கள், வங்கி முதலீட்டு ஆவணங்கள் சிக்கின.

இதற்கிடையில், கடந்த திங்கள்கிழமை வேலூர் ஜே.எம்.5-வது நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் மோகனாம்பாள், நிர்மலா ஆகியோர் சரணடைந்தனர். இருவரும் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் அடைக்கப்பட்டனர். ரூ.4.04 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக காட்பாடி நீதிமன்ற நீதிபதி சுஜாதா, இருவரையும் 48 மணி நேர காவலில் விசாரிக்க காட்பாடி போலீஸாருக்கு அனுமதி அளித்தார். ரகசிய இடத்தில் வைத்து இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை முடிந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை நீதிபதி சுஜாதா முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் வரும் 27-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத காவல் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 2 ஆண்டுகளாக நிர்மலாவின் மகன் சரவணன் செம்மர கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். மிக குறுகிய காலத்தில் சரவணனுக்கு கோடிக்கணக்கில் பணம் கொட்டியது. சித்தி மோகனாவிடம் மொத்த பணத்தையும் கொடுத் துள்ளார். மோகனா ஏற்கெனவே வட்டி தொழில் செய்துவந்ததால் சரவணன் கொடுத்த பணத்தை சுலபமாக வட்டிக்கு விட்டு பணத்தை இரட்டிப்பாக்கியுள்ளார். காட்பாடியில் ஜமுனாவின் வீட்டை வாடகைக்கு எடுத்து யாருக்கும் தெரியாமல் மொத்த பணத்தையும் பாதுகாத்துள்ளனர். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சில முக்கிய புள்ளிகள் செம்மர கடத்தல் தொழிலுக்காக சரவணனிடம் ஏராளமான பணத்தை முன்பணமாக வழங்கியுள்ளனர்.

இருவரும் கொடுத்த தகவலின் பேரில், கஸ்பா பகுதியில் இருந்த வீடு மற்றும் பெட்டி கடைகளில் வெள்ளிக்கிழமை காலை சோதனை நடத்தினோம். அப்போது, மோகனாம்பாளின் வீட்டில் இருந்து வட்டிக்கு பணம் கொடுத்ததற்கான பத்திர ஆவணங்கள், ஒரு சொகுசு கார், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x