

சென்னையின் நெரிசலைக் கருத்தில் கொண்டு திருச்சியை 2-வது தலைநகரமாக்க வேண்டும் என் றார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
கனமழையால் சென்னை மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அந்நகரின் மக்கள் தொகைப் பெருக்கம், போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, திருச்சியை தமிழகத்தின் 2-வது தலைநகரமாக அறிவிக்க வேண்டும். மாநிலத்தின் மையப் பகுதியில் சர்வதேச விமானநிலையத்துடன் இருப்பதால் திருச்சி அதற்கு பொருத்தமாக இருக்கும்.
புதிய திட்டங்கள், வளர்ச்சிப் பணிகளுக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு தேவையான அளவு புறம்போக்கு நிலங்கள் திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் பகுதிகளில் உள்ளன. எனவே, திருச்சியை 2-வது தலைநகரமாக்கி இங்கு சட்டப்பேரவை கூட்டத் தொடர், அமைச்சரவைக் கூட்டம் போன்றவற்றை நடத்த வேண்டும்.
வேளாண்மையில் இப்பகுதி சிறந்து விளங்குவதால், அது தொடர்பான துறைகளின் தலைமை அலுவலகங்களை திருச்சியில் அமைக்க வேண்டும். பாமக ஆட் சிக்கு வந்தால், இதனை செயல் படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அதிமுக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரிப் பாசன மாவட்டங்களை வெள்ளம் பாதித்த பகுதிகளாக அறிவித்து, நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு சங்க கடன் களை முற்றிலுமாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
தமிழக அரசு பிடிவாதத்தை கைவிட்டு, அரையாண்டு தேர்வு களை ரத்து செய்ய வேண்டும். அவசர சட்டத்தைக் கொண்டு வந்து, இந்த ஆண்டாவது ஜல்லிக் கட்டு நடத்த தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பாஜகவுடன் எல்லாம் முடிந்துவிட்டது
“2014 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்தபோது எங்களுக்குள் தொகுதி உடன்பாடு மட்டுமே ஏற்படுத்திக் கொண்டோம். தேர்தல் முடிந்த பிறகு நீ யாரோ? நான் யாரோ?. நேசம், பாசம், ஒட்டு, உறவு எல்லாம் முடிந்துவிட்டது
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அதிமுகவும், திமுகவும் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சாத்தியமே இல்லை. அரசுக்கு எதிரான அலை மக்கள் மத்தியில் வீசத் தொடங்கியுள்ளது” என்று ராமதாஸ் தெரிவித்தார்.