

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சென்னையில் இருந்து காணொலி மூலம், அமைச்சர்கள் பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் சண்முகையா, மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், ஒன்றியக்குழு தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுடன் கரோனா தடுப்புதொடர்பாக காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அவர் பேசும்போது, “தூத்துக்குடி மாவட்டத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர். இதனைதீவிரப்படுத்த வேண்டும். தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் மூலம் தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 3 பேருக்கு மேல் தொற்று இருந்தால், அந்த பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் தடுப்பூசி செலுத்துவதில் சிறப்பாக செயல்படும் ஊராட்சிக்கு பரிசு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மாவட்ட ஆட்சியரும் கேடயம் மற்றும் கூடுதல் நிதி கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். அனைவரின் கூட்டு நடவடிக்கைகளால் தூத்துக்குடி மாவட்டம் கரோனா தொற்றில் இருந்து மீண்டு, தொற்று இல்லாத மாவட்டமாக திகழும்” என்றார்.
ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி கூட்டத்தில் அமைச்சர்களுடன், ஆட்சியர் கி.செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார், சார் ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.