

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், திருவிடைமருதூர் சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார். அப்போது, திருப்பனந்தாள் அருகேயுள்ள கோணுளாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கரோனா தடுப்பூசி போடுவதில் முன்களப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, வருகிறது. கரோனா தொற்றால் யார் இறந்தாலும், அவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு நன்றி. அவர்களுக்கு கரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கி, தடுப்பூசி போடுவதற்கான பணியை மேற்கொள்வதாக ஆட்சியர் கூறியுள்ளார்.
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 75 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன. மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் குறைந்தபட்சம் ஒரு ஆக்சிஜன் செறிவூட்டியாவது வைக்க வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். அதன் அடிப்படையில், கோணுளாம்பள்ளம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 3 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக ஆய்வுக்கு சென்றபோது, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை இருப்பதாக கோரிக்கைகள் வந்தன.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதற்கான ஏற்பாடு செய்யப்படும். மாவட்டத்தில் 152 மருத்துவர்களை தேர்வு செய்வதற்கான உத்தரவு அரசிடமிருந்து வரவிருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். இந்த உத்தரவு வந்தவுடன், அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி.செழியன், மயிலாடுதுறை தொகுதி எம்.பி செ.ராமலிங்கம், கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் மற்றும் ஆட்சியர் ம.கோவிந்தராவ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.