Published : 30 May 2021 03:14 AM
Last Updated : 30 May 2021 03:14 AM

30 நாள் பரோல் கோரியுள்ள நிலையில் நளினி, முருகன் தங்கும் வீட்டின் பாதுகாப்பு குறித்து ஆய்வு

வேலூர்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, முருகன் இருவரும் 30 நாள் பரோல் கோரியுள்ள நிலையில், அவர்கள் தங்கவுள்ள காட்பாடி குடியிருப்பின் பாதுகாப்பு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவுள்ளனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகியுள்ள நளினி, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதே வழக்கில் கைதாகியுள்ள நளினியின் கணவர் கரன் என்ற முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் தம்பதி என்பதால் 15 நாட்களுக்கு ஒருமுறை 30 நிமிடங்கள் சந்தித்து பேசிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இலங்கை யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த முருகனின் தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்க வேண்டும் என்பதால் 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என சிறை நிர்வாகத்திடம் முருகன் கோரிக்கை வைத்துள்ளார்.

அதேபோல், நளினியும் மாமனாரின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதால் 30 நாள் பரோல் வழங்கக் கோரியுள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவர்கள் அளித்துள்ள கோரிக்கை மனுக்கள் சிறைத் துறை தலைவர் மற்றும் உள்துறைச் செயலரின் பரிசீலனையில் இருப்பதாக சிறைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பரோல் காலத்தில் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருக்க விரும்புவதாக இருவரும் ஒரே முகவரியை தெரிவித்துள்ளனர். அந்த முகவரி குறித்தும் அங்கு தங்கும் வசதிகள் குறித்தும் சிறை நன்னடத்தை அலுவலர்கள் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

அதேபோல், காவல் துறை மற்றும் க்யூ பிரிவு காவல் துறையினர் அந்த வீட்டின் பாதுகாப்பு வசதிகள் குறித்தும் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஓரிரு நாளில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x