Published : 29 May 2021 07:46 PM
Last Updated : 29 May 2021 07:46 PM

வாழ்வாதாரம் பாதித்த ஏழை மக்களுக்கு கோயில் பெயரில் அன்னதானம் வழங்கலாம்: அமைச்சர் சேகர்பாபு அழைப்பு 

சென்னை

அன்னதான நன்கொடை செய்ய விரும்புவோர் “அன்னதானம் நன்கொடை” என்ற தலைப்பைத் தேர்வு செய்து நிதி வழங்கலாம். முதற்கட்டமாக 57 திருக்கோயில்களின் பெயர்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நன்கொடை செலுத்த விரும்புவோர் அத்திருக்கோயில்களில் எந்தத் திருக்கோயிலுக்குத் தாங்கள் நன்கொடை செலுத்த விரும்புகிறீர்களோ அந்தத் திருக்கோயிலைத் தேர்வு செய்யலாம் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்றினால் பெரும்பாலான ஏழை எளிய மக்கள் தங்களது வாழ்வாதாரத்தினை இழந்து அன்றாட வாழ்க்கைக்குப் போராடி வரும் நிலையில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது உதவியாளர்கள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்த வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் குடும்பங்கள் ஆகியோரது பசியினைப் போக்கும் வகையில் திருக்கோயில்களிலிருந்து உணவுப் பொட்டலங்களை வழங்கிடுமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், திருக்கோயில்கள் வாயிலாக உணவு தயாரிக்கப்பட்டு பொட்டலங்களாக வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கு மகத்தான வரவேற்பு கிடைத்து வருகிறது.

திருக்கோயில்கள் சார்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த உன்னதமான அன்னதான திட்டத்தினைத் தொய்வின்றி தொடர்ந்து செயல்படுத்திட கூடுதல் நிதி தேவைப்படுவதால் அன்னதான திட்டத்திற்குத் தாராளமாக நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன.

அன்னதானத்திற்கு நன்கொடை வழங்குதலை எளிமைப்படுத்தி இணையவழியாக செலுத்தும் வசதியும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவ்வசதி குறித்த விவரம்:

* அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்க விரும்புவோர் இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தைப் (hrce.tn.gov.in) பார்வையிட்டு அதன் முகப்புப் பக்கத்தில் தோன்றும் “நன்கொடை” என்ற தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தேர்வு செய்தவுடன் பொது நன்கொடை, அன்னதானம் நன்கொடை, திருப்பணி நன்கொடை என்ற மூன்று திட்டங்கள் இணையதளத்தில் தோன்றும்.

* அன்னதான நன்கொடை செய்ய விரும்புவோர் “அன்னதானம் நன்கொடை” என்ற தலைப்பைத் தேர்வு செய்ய வேண்டும். தற்போது முதற்கட்டமாக 57 திருக்கோயில்களின் பெயர்கள் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். நன்கொடை செலுத்த விரும்புவோர் அத்திருக்கோயில்களில் எந்தத் திருக்கோயிலுக்குத் தாங்கள் நன்கொடை செலுத்த விரும்புகிறீர்களோ அந்தத் திருக்கோயிலைத் தேர்வு செய்ய வேண்டும்.

* நன்கொடை செலுத்த விரும்புவோர் தங்களது பெயர், முகவரி, அஞ்சலகக் குறியீடு, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி மற்றும் செலுத்த விரும்பும் தொகை ஆகியவற்றைக் கட்டாயம் உள்ளீடு செய்ய வேண்டும். வருமான வரி விலக்குப் பெற விரும்பினால் தங்களது நிரந்தரக் கணக்கு எண்ணையும் (PAN) பதிவு செய்ய வேண்டும்.

* மேற்கண்ட தகவல்களை உள்ளீடு செய்தபின் தாங்கள் அளித்த தகவல்களை மீண்டும் சரிபார்க்க ஏதுவாக தாங்கள் பதிவிட்ட தகவல்கள் திரையில் காண்பிக்கப்படும். சரியாக இருப்பின் கணினி வழியாக நிதி பரிவர்த்தனை செய்யலாம்.

* நிதி பரிவர்த்தனை செய்ய விரும்புவோர் பற்று அட்டை (Debit Card), கடன் அட்டை (Credit Card) மற்றும் இணையவழி வங்கிச் சேவை (Internet Banking) வாயிலாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் (IOB) கட்டண செலுத்து முறை (Payment Gateway) வழியாக நிதி பரிவர்த்தனை செய்யலாம்.

அவ்வாறு செலுத்தப்படும் நிதியானது, சம்பந்தப்பட்ட திருக்கோயில்களின் பெயரில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்கிற்கே நேரடியாகச் சென்றுவிடும்.

* நிதி பரிவர்த்தனை செய்து முடித்தவுடன், பரிவர்த்தனை குறித்த ஓர் ஒப்புகை அட்டை (Acknowledgement) தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். அந்த ஒப்புகை அட்டையில் நிதி பரிவர்த்தனை செய்த எண் (Transaction Number), நிதி பரிவர்த்தனை செய்த நாள் மற்றும் நேரம் (Transaction Date & Time), நிதி செலுத்தியவர்கள் பெயர், முகவரி, நிரந்தரக் கணக்கு எண் (PAN) மற்றும் பரிவர்த்தனை குறித்த இதர விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

* அன்னதான திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைக்கு, இந்திய வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80ஜி-இன் கீழ் வரிவிலக்கும் உண்டு.

எனவே, திருக்கோயில்கள் மூலமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்தைத் தொடர்ந்து தொய்வு ஏதுமின்றி செயல்படுத்த ஏதுவாக, தாராளமாக நன்கொடை வழங்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு வேண்டுகோள் விடுத்துள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x