Published : 29 May 2021 06:02 PM
Last Updated : 29 May 2021 06:02 PM

குடியிருப்போர் சங்கங்கள் ‘வாட்ஸ் அப்’ செய்தால் போதும் காய்கறிகள், பழங்கள் மொத்தமாக அனுப்பிவைக்கப்படும்: மதுரை மாநகராட்சி புது முயற்சி

அதிகளவில் காய்கறிகள், பழங்கள் தேவைப்படும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்ணில் வாட்ஸ் அப் செய்தால் போதும், மொத்தமாக அவற்றை அனுப்பிவைக்கும் புது முயற்சியை மதுரை மாநகராட்சி தொடங்கியுள்ளது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழு ஊரடங்கு காரணமாக பொதுமக்கள் வெளியே வருவதைத் தவிர்க்கும் வகையில் 100 வார்டுகளிலும் மதுரை மாநகராட்சி, தோட்டக்கலைத்துறை மற்றும் விவசாயத்துறை ஆகிய துறைகளின் மூலம் நடமாடும் வாகனங்களில் பொதுமக்களை அவர்கள் குடியிருப்புகளுக்கே தேடிச் சென்று காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனாலும், தள்ளுவண்டியில் சென்று விற்பனை செய்தாலும் பழங்கள், காய்கறிகள் வாங்க மக்கள் அதிகளவு கூடிவிடுகின்றனர்.

தற்போது இந்தக் கூட்டடத்தை தவிர்க்க அதிகளவில் காய்கறிகள், பழங்கள் தேவைப்படும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறை எண்ணில் வாட்ஸ் அப் செய்தால் மொத்தமாக அவை அனுப்பிவைக்கும் திட்டம் மதுரை மாநகராட்சியில் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் விசாகன் கூறுகையில், ‘‘மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள் தங்கள் குடியிருப்பில் உள்ள பொதுமக்களுக்கு வேண்டிய காய்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த தேவையை கணக்கிட்டு மதுரை மாநகரட்சியின் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள 842842 5000 என்ற எண்ணில் வாட்ஸ் அட் மூலம் தகவல் தெரிவிக்கலாம்.

அவர்களுக்கு மொத்தமாக வியாபாரிகள் மூலம் காய்கறிகள், பழங்கள் அனுப்பி வைக்க மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குடியிருப்போர் நலச்சங்கள், மொத்தமாக அனுப்பி வைக்கும் காய்கறி, பழங்களைப் பிரித்து விநியோகம் செய்யலாம்.

இதனால், கூட்டம் கூடுவதைத் தவிர்க்கலாம். எனவே காய்கறிகள் மற்றும் பழங்கள் அதிகளவில் தேவைப்படும் குடியிருப்போர் நலச்சங்கங்கள் இந்த வாட்ஸ் அப் எண்ணில் தகவல் தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x