

திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வருவதாகவும், அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மாநகராட்சி கோ-அபிசேகபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகங்களில் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்புப் பெட்டகத்தை வழங்கி, பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி இடும் முகாமை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு பேசும்போது, "அரசின் நடவடிக்கையால் கரோனா பரவல் குறைந்து வருகிறது. காய்கறி வாங்க வந்து கரோனாவை வீட்டுக்கு வாங்கிச் செல்லக் கூடாது. அரசுக்கு எந்த அளவுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறீர்களோ அந்த அளவுக்கு கரோனா பரவல் குறையும்" என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:
"திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள்தோறும் 1,700, 1,600 என்ற அளவில் இருந்து தற்போது 1,200 என்ற அளவுக்குக் குறைந்துள்ளது. மாநிலத்தில் பிற மாவட்டங்களைக் காட்டிலும் திருச்சி மாவட்டத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் இன்றைய நிலவரப்படி தீவிர சிகிச்சைப் பிரிவில் 35 படுக்கைகள் உட்பட மொத்தம் 105 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக உள்ளன.
திருச்சி மாநகர மக்களுக்குத் தேவையான அளவு குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களுக்கு எங்கு குடிநீர் தேவை என்பதை அறிந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கொள்ளிடம் ஆற்றில் உள்ள கலெக்டர் வெல் நீரேற்று நிலைங்கள் 1, 2 ஆகியவற்றில் (aerator) குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பு நிறுவப்பட்டு மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 55 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குச் செல்லும் குடிநீரில் உள்ள இரும்புத் தாது அளவு குறைக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் 3-ல் உறையூர் மற்றும் தில்லை நகர் பகுதிகளில் உள்ள 10 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு உந்தப்படும் குடிநீரில் இரும்புத் தாது அளவைக் குறைத்து குடிநீர் வழங்கப் புதிதாக சுத்திகரிப்புக் கட்டமைப்பு நிறுவ ரூ.4 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் புதிய சாலைகள் அமைக்கப்படும். மழை தொடங்குவதற்கு முன்பே உய்யக்கொண்டான் வாய்க்கால் தூர்வாரப்படும். உய்யக்கொண்டான் வாய்க்காலில் சாக்கடை கலக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். புதை சாக்கடை இல்லாத பகுதிகளில் புதை சாக்கடை அமைக்கவும், ஏற்கெனவே நடைபெற்று வரும் பணிகளை விரைவாக முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரோனா தொற்றை ஒழிப்பது மட்டுமின்றி மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்றுவது அரசின் பணி. அந்த வகையில் மக்களுக்கான அனைத்துத் தேவைகளும் நிறைவேற்றப்படும். அரசின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்".
இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
முன்னதாக, ஸ்ரீரங்கம் கொள்ளிடம் கரை ஆண்டவர் ஆசிரமம் சாலையில் உள்ள பொது தரைமட்டக் கிணறு வளாகத்தில் குடிநீர் சுத்திகரிப்புக் கட்டமைப்பை அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ எம்.பழனியாண்டி, மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன், மாநகராட்சி முதன்மைப் பொறியாளர் எஸ்.அமுதவல்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.