Published : 29 May 2021 04:43 PM
Last Updated : 29 May 2021 04:43 PM

தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை

தமிழகத்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்படுகிறது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஓரளவு கைகொடுத்துள்ளது என்று கூட்டுறவுத்துறை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோச்சடையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் தடுப்பூசி முகாமை முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரோனா காரணமாக பள்ளிக்கூடங்கள் பல திறக்காமல் உள்ள நிலையில், அங்கு தடுப்பூசி மையங்கள் அமைத்து கூலித்தொழில் செய்யும் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை கரோனா தொற்று குறைந்துள்ளது. கரோனா எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகிறது. தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஓரளவு கைகொடுத்துள்ளது. ஆனால் வெறும் முழுஊரடங்கு மட்டும் தீர்வாக அமையாது.

மக்களிடம் பணப்புழக்கம் இல்லை. வேலை இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்குக் கூடுதலாக 5000 ரூபாய் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் முன்வர வேண்டும்.

இந்த நேரத்தில் முந்தைய ஆட்சியைக் குறை சொல்வது சரியாக இருக்காது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தான் கரோனா மரணம் அதிகரித்து நோய்த்தொற்று காட்டுத்தீ போல பரவியது.

திமுக ஆட்சியில் தான் கரோனா மரண எண்ணிக்கை கூடியுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் அதிக நோயாளிகள் இல்லை. அதனால், ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்படவில்லை.

எங்களை விமர்சிக்கும் முன் சுகாதாரத்துறை அமைச்சர் பார்த்து பேசவேண்டும். இதிலிருந்து அவர் அமைச்சர் என்கிற தகுதியை வளர்த்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது.

இந்த ஆட்சியில் கரோனா விவகாரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை. மக்கள் பீதியடைவார்கள் என உண்மைகளை மறைக்கின்றனர். ஈபிஎஸ் ஒபிஎஸ் இரட்டைக்குழல் துப்பாக்கி. எங்களுக்குள் எதுவும் இல்லை. கட்சியை சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகளுக்கு மிரட்டல் உருட்டல் வரும் என எல்லோருக்கு தெரியும். எங்கள் ஆட்சியில் அதிகாரியிடம் நாங்கள் எந்தப் பிரச்சனைக்காகவும் நேரிலோ தனிப்பட்ட முறையிலோ பேச மாட்டோம். ஆனால் திமுக பிரமுகர் தலையீட்டால் ஜெய்ஹிந்த்புரம் ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் தேனிலவே முடியவில்லை. அதற்குள் 'ரவுடியிஸம்' தலைதூக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x