Last Updated : 29 May, 2021 03:11 AM

 

Published : 29 May 2021 03:11 AM
Last Updated : 29 May 2021 03:11 AM

தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவை மதிக்காமல் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை கட்டண கொள்ளை: கடன் வாங்கியும், நகைகளை விற்றும் பணத்தை செலுத்தும் பொதுமக்கள்

கோப்புப் படம்

சென்னை

தமிழக அரசின் உத்தரவை மதிக்காமல், கார்ப்பரேட் மருத்துவமனைகள் கரோனா சிகிச்சை கட்டண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் கடன் வாங்கியும், நகையை விற்றும் பணத்தை செலுத்தவேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஆண்டு கரோனா சிகிச்சைமையம் அமைத்து தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொற்று அதிகரித்ததால், தனியார்மருத்துவமனைகளிலும் கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதியளித்தது. மேலும், லேசானது முதல் தீவிர சிகிச்சைக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை என கட்டணத்தை அரசு நிர்ணயித்தது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டை வைத்துள்ளவர்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால்,தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிக்கத் தொடங்கின. காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் ஏழை, எளிய மக்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வழங்கப்படுவதால், மீதமுள்ள பணத்தை செலுத்த முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில், தமிழக முதல்வராகப்பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், தனியார் மருத்துவமனைகளில் கரோனாசிகிச்சைக்கு வருபவர்களின் கட்டணத்தைகாப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அரசு ஏற்கும்என உத்தரவிட்டார். இதையடுத்து, தமிழகஅரசு வெளியிட்ட அரசாணையில் ஏற்கெனவே இருந்த கட்டணத்தில் எவ்விதமாற்றமும் இல்லை. கரோனாவுக்குசிகிச்சை அளிக்க மட்டும் கூடுதலாக தனியார் மருத்துவமனைகள் மட்டும் சேர்க்கப்பட்டன.

லேசான மற்றும் மிதமான தொற்று பாதிப்பு சிகிச்சைக்கான அரசின் கட்டணம் போதுமானதாக உள்ளது. ஆனால்,தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் என நிர்ணயித்தது போதுமானதாக இல்லை. இந்த கட்டணத்தைக் கொண்டு மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாதுகாப்பு கவச உடை மற்றும்விலை உயர்ந்த மருந்துகளை வாங்கி வென்டிலேட்டர், ஆக்சிஜன் வசதியுடன் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் கடினம். அதனால், தீவிரசிகிச்சை கட்டணத்தை ரூ.22,300 வரைஉயர்த்தி வழங்குமாறு சிறு மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் நிர்வாகிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதை பரிசீலித்த தமிழக அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கான சிகிச்சை கட்டணத்தை மாற்றி அமைத்து அரசாணை வெளியிட்டது. அதில், ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரையும், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்கு ரூ.15 ஆயிரமும், ஆக்சிஜனுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.25 ஆயிரமும், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஊடுருவாத வென்டிலேட்டர் சிகிச்சைக்கு ரூ.30 ஆயிரமும், வென்டிலேட்டர் வசதியுடன் கூடிய தீவிர சிகிச்சைக்கு ரூ.35 ஆயிரமும் ஒருநாள் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய கட்டணத்தில் சிறு மற்றும்நடுத்தர மருத்துவமனைகள் கரோனாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன. ஆனால், பெரிய மருத்துவமனைகளில் (கார்ப்பரேட்) தற்போதும் கரோனா சிகிச்சைக்கு அரசின் கட்டணத்தைவிட கூடுதலாகவே வசூலிக்கப்படுகிறது. முக்கியமாக, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டையுடன் சிகிச்சைக்கு வருபவர்களிடம் படுக்கை காலியாக இல்லை என தெரிவித்து அனுப்பி விடுகின்றன. முன்பணம் கட்டுபவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

சாதாரண படுக்கைக்கு ரூ.20 ஆயிரம்முதல் 50 ஆயிரம் வரையும், ஆக்சிஜன், வென்டிலேட்டர் போன்ற தீவிர சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் கடன் வாங்கியும், நகைகளை அடமானம் வைத்தும், விற்றும் பணத்தை செலுத்தி வருகின்றனர். சிலர் சொத்துகளை விற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் 25 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என ஆரம்பத்தில் தெரிவித்தோம். தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளதால் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களும் படுக்கைகளை ஒதுக்கியுள்ளனர். முதல்வர் காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் கரோனாவுக்கு இலவசமாக சிகிச்சை பெறலாம். ‘ரெம்டெசிவிர்’ உள்ளிட்ட விலை உயர்ந்த மருந்துகள் மற்றும் அனைத்து பரிசோதனைகளுக்கான கூடுதல் கட்டணம் பயனாளிகள் சார்பில்காப்பீடு நிறுவனம் மூலம் மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

காப்பீட்டு அட்டை இல்லாதவர்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சிகிச்சை பெற முடியும். கரோனா சிகிச்சைக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருக்கிறோம். சில தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம்அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் குறித்து 1800 425 3993 மற்றும்104 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்திய மருத்துவ சங்கத்தின் தனியார் மருத்துவமனைகள் வாரியம் (தமிழகம்) தலைவர் மருத்துவர் தர் கூறும்போது, “தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள கரோனா சிகிச்சைக்கான கட்டணம் போதுமானதாக உள்ளது. நாங்கள் கேட்டதைவிட கூடுதலாகவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எங்கள் சங்கத்தில் உள்ள 4,800-க்கும் மேற்பட்ட சிறு, நடுத்தர தனியார் மருத்துவமனைகளில் அரசின் கட்டணத்தில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறுபவர்களிடம் கூடுதல் கட்டணம் வாங்குவதில்லை. பெரிய மருத்துவமனைகள் எங்களுடைய கட்டுப்பாட்டில் இல்லை. இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்களும் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x