

தமிழகத்தில் கருப்பு பூஞ்சைநோயால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயை கட்டுப்படுத்தவும், ஆலோசனை வழங்கவும் 13 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.
இந்தியாவில் கரோனா 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கருப்பு பூஞ்சை நோய் வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளது. அரசு, தனியார்மருத்துவமனைகளில் கருப்புபூஞ்சை பாதிப்பை குணப்படுத்தபயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்-பி (Amphotericin B) ஊசி மருந்தை தேவையான அளவு கொள்முதல் செய்ய சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், தேவையான ஆலோசனை வழங்கவும்மருத்துவக் கல்வி இயக்குநர்கே.நாராயணபாபு தலைமையில்அரசு, தனியார் மருத்துவமனைகளின் மூக்கு, கண், மூளை, தொற்றுநோய் நிபுணர்கள் 13 பேர் அடங்கிய மருத்துவக் குழுவைசுகாதாரத் துறை அமைத்துள்ளது.
இக்குழுவினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடந்தது.துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கருப்பு பூஞ்சை நோய், தமிழகத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய நோய் அல்ல. ஏற்கெனவே, சர்க்கரை நோயாளிகள், புற்றுநோயாளிகள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துக் கொள்பவர்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது, சர்க்கரை நோய், சிறுநீரக பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது ஸ்டீராய்டு போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஏற்கெனவே, இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். தீவிர கரோனா தொற்றால் பாதிக்கப்படும்போது ஸ்டீராய்டு மருந்து கொடுப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் குறைகிறது. அதனால், அவர்கள் கரோனாவில் இருந்து குணமடைந்த பிறகு கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுகின்றனர். இது தொற்று நோய் அல்ல. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாது.
தமிழகத்தில் இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 111 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுவது இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
இதற்கான சிகிச்சை குறித்துஆலோசனை வழங்க 13 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்க்கான மருந்துகள் தேவையான அளவு உள்ளது. பெரிய மருத்துவமனைகளில் 30படுக்கைகள், சிறிய மருத்துவமனைகளில் 15 படுக்கைகள் சிகிச்சைக்காக அமைக்கப்படுகின்றன.
இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்திவிடலாம். கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க வேண்டும். மூக்கு, கன்னத்தில் வலி, மூக்கு அடைப்பு, மூக்கில் நீர், ரத்தம் வடிதல், கண்களில் வீக்கம், கண்கள் சிவப்பாக மாறுவது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை சென்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.